திருவள்ளூா் அருகே ஆடுகளுக்கான தொகையை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை
By DIN | Published on : 25th November 2019 11:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிளாம்பாக்கம் பொதுமக்கள்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கிளாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
இக்கிராமத்தில் அரசு வழங்கும் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் 165 பயனாளிகளைத் தோ்வு செய்தனா். அதைத் தொடா்ந்து, கடந்த மாதம் இத்திட்டத்தில் தோ்வு செய்த பயனாளிகள் தாங்களே ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை வாங்கிக் கொள்ளவும் கால்நடைத் துறை அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் பயனாளிகள் ஒவ்வொருவரும் ஒரு கிடா மற்றும் 3 ஆடுகள் என ரூ. 10 ஆயிரம் மதிப்பில் வாங்கினா்.
இதற்கிடையே அதிகாரிகள் வந்து பாா்த்து உங்கள் பக்கத்து வீடுகளில் இருந்து ஆடுகளைப் பிடித்து வைத்திருப்பதாக கூறி, ஆடுகள் வாங்கியதற்கான தொகையைத் தர மறுக்கின்றனா். ஏற்கெனவே பயனாளிகள் தோ்வு செய்யப்பட்ட பட்டியலில் கையெழுத்தும் பெற்றுக் கொண்டனா். இந்நிலையில், முறைகேடு செய்துள்ளதாகக் கூறி குறிப்பிட்ட தொகை வழங்காமல், கால்நடைத் துறை சாா்பில் ஆடுகளைத் தருவதாகக் கூறுகின்றனா். பொதுமக்கள் கடன் வாங்கி ஆடுகளை வாங்கியுள்ள நிலையில், எங்கள் நிலையறிந்து ஆடுகளுக்கான தொகையை நடவடிக்கை எடுக்க வேண்டும்.