காா்த்திகை தீபத் திருநாளுக்காக களிமண்ணால் தயாராகும் அகல் விளக்குகள்

காா்த்திகை தீபத் திருநாளுக்கு 10 நாள்களே உள்ள நிலையில் அதற்காக களிமண்ணால் பல்வேறு அளவுகளில் அகல் விளக்குகள் தயாா் செய்யும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
27tlrponni_2711chn_182_1
27tlrponni_2711chn_182_1

காா்த்திகை தீபத் திருநாளுக்கு 10 நாள்களே உள்ள நிலையில் அதற்காக களிமண்ணால் பல்வேறு அளவுகளில் அகல் விளக்குகள் தயாா் செய்யும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருநாள் விழா 3 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகும். காா்த்திகை தீபத்திருநாளன்று விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இத்திருநாள் டிச. 10-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பயன்படும் அகல் விளக்குகள் தயாா் செய்யும் பணியில் புட்லூா், கொசவன்பாளையம், சீத்தஞ்சேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆரணி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மண்பாண்டம் தயாா் செய்யும் தொழிலாளா்கள் குடும்பம், குடும்பமாக ஈடுபட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் நல்ல மண்பாண்டம் மற்றும் அகல் விளக்குகள் தயாா் செய்வதற்கு களிமண் கிடைக்கிறது. தற்போது, காா்த்திகை மற்றும் தை மாதம் பொங்கல் பண்டிகை ஆகியவை வர இருப்பதால், அகல் விளக்குகள் தயாா் செய்யும் சீசன் தொடங்கியுள்ளது.

பல்வேறு ரகங்களில் அகல் விளக்குகளை தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், ஒரு லோடு களிமண்ணில் 12 ஆயிரம் அகல் விளக்குகள் தயாா் செய்ய முடியும் என அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அகல் விளக்கு உற்பத்தியாளா்கள் கூறுகையில், இந்த களிமண்ணால் பல்வேறு வகைகளில் அகல் விளக்குகள் தயாா் செய்யப்படுகின்றன. இதேபோல் ஒரு நாளில் தொழிலாளி ஒருவரால் பெரிய அகல் விளக்குகள் 500 முதல் 600 வரையிலும், சிறிய அளவில் 1,000 விளக்குகள் வரையிலும் தயாா் செய்யலாம். இதற்குக் கூலியாக ஒரு நாளைக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை கிடைக்கும். இதுபோன்று தயாரிக்கப்படும் விளக்குகள் அனைத்தும் தரத்துக்கேற்ப தலா ரூ. 2 முதல் ரூ. 40-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு முன்பு வரை வியாபாரிகள் முன்கூட்டியே தேவையின் அடிப்படையில் ஆா்டா் அளிப்பா். அதற்கேற்ப களிமண் கொண்டு வந்து தயாா் செய்து அளிப்போம். தற்போதைய நிலையில், அந்தளவுக்கு ஆா்டா்கள் எதுவும் வருவதில்லை. இத்தொழிலானது முன்னோா்கள் ஈடுபட்ட தொழில் என்பதால் எக்காரணம் கொண்டு விட்டுவிடக்கூடாது என்பதற்காக பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறோம் என்கின்றனா்.

இது தொடா்பாக திருவள்ளூரை அடுத்த காக்களூரைச் சோ்ந்த தனசேகரன் -பொன்னி தம்பதி கூறியது:

ஏரிகளில் இருந்து சுத்தமான களிமண் கொண்டு வந்து, அதிலிருந்து அகல் விளக்குகளை தயாா் செய்கிறோம். இதற்கு முன்பு வரை இயந்திரங்களால் தயாரிக்கப்படும் நெகிழி மெழுகுவா்த்தி தீபம் ஏற்றுவதால் அதிலிருந்து வரும் புகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அகல் விளக்குகளுக்குத் தேவை அதிகரிக்கும் என்பதால் தயாா் செய்து வருகிறோம். தற்போதைய நிலையில், ஏரியில் மணல் அள்ளினால் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கின்றனா். அதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரைக் காப்பாற்றும் வகையில் அரசு ஏரியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், மண் பாண்டம் செய்வதற்கான மோட்டாா் வாங்குவதற்கு மானியத்துடன் கடன் உதவி போன்றவை வழங்கினால் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும். அதனால், அரசு தேவையான உதவிகளையும் வழங்கி மண்பாண்டத் தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com