முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
தனியார் கல்லூரியில் ரூ. 2.68 லட்சம் கையாடல் செய்தவர் கைது
By DIN | Published On : 07th October 2019 04:11 AM | Last Updated : 07th October 2019 04:11 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் ரூ. 2.68 லட்சம் கையாடல் செய்ததாக கணக்குப் பிரிவில் பணிபுரிந்து வந்த இளைஞரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கத்தில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கணக்குப் பிரிவில் சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த சஞ்சீவ் பிரதீப் குமார்(25) வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தகம் வாங்குவதற்கு பணம் வசூலிக்கப்பட்டதாம். இதை சரிபார்த்த போது ரூ. 2.68 லட்சம் குறைந்ததுடன், அதை சஞ்சீவ்பிரதீப்குமார் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும், விசாரித்தபோது அவர் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அக் கல்லூரியின் நிர்வாகி வினோத் அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, சஞ்சீவ் பிரதீப் குமாரை தேடிவந்தனர். இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் பேருந்து நிலையம் எதிரே அவர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அங்கு சென்ற மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் கண்ணப்பன் தலைமையிலான போலீஸார் சஞ்சீவ் பிரதீப்குமாரை கைது செய்தனர்.
பின்னர், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எண்-1-இல் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.