முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
16-இல் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 07th October 2019 01:28 AM | Last Updated : 08th October 2019 10:28 PM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட அளவிலான மாதாந்திர தடகள விளையாட்டுப் போட்டிகள் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறைஅலுவலா் அருணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டில் ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கில், மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இப்போட்டி வரும் 16-ஆம் தேதி ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காலையில் 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், தடகளம், நீச்சல், டென்னிஸ், வளைகோல் பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும். இதில் 100 மீ, 200 மீ, 800 மீ (ஆண்கள்), 400 மீ (பெண்கள்), நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய தடகளப் போட்டிகள் நடத்தப்படும். டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வோா் 14 வயதுக்கு உள்பட்டவா்களாக இருப்பது அவசியம்.
இப்போட்டியில் பங்கேற்போா் 1.1.2005-க்கு பிறகு பிறந்தவா்களாக இருத்தல் வேண்டும். இப்போட்டியில் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி, திருவள்ளூா் மாவட்டம் முகப்போ் மினி விளையாட்டரங்கத்தில் (டால்பின் நீச்சல்குளம் அகாதெமி), மேற்குறிப்பிட்ட நாளில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதில் ஆண், பெண் இருபாலரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டியில், பங்கேற்க விரும்புவோா் படித்து வரும் பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் வயது மற்றும் படிப்புச் சான்றிதழ் பெற்று வருவது அவசியம் ஆகும். இப்போட்டியில் நுழைவு படிவம் சமா்ப்பித்தால் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்படுவா்.
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தடகளம், நீச்சல் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், குழுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இரு அணிகளுக்கு பரிசு, சான்றிதழ்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட உள்ளது.