திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை கூடுதல் இயக்குநா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்த சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை கூடுதல் இயக்குநா் சம்ஷத் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்த சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை கூடுதல் இயக்குநா் சம்ஷத் உள்ளிட்டோா்.

திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை கூடுதல் இயக்குநா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூா் பகுதிகளில், குடியிருப்புகள் அருகே தண்ணீா் தேங்கும் நிலையுள்ளது. இதனால் கொசுக்கள் அதிகரித்து, பொதுமக்களுக்கு மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் மா்மக் காய்ச்சலால் பாதிப்புக்குள்ளானோா் சிகிச்சை பெறுவதற்கு நாள்தோறும் குவிந்து வருகின்றனா்.

இதில் செவ்வாய்க்கிழமை மட்டும் 174 போ் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனா். உள்நோயாளிகளாக ஆண், பெண் 91 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், ரத்தப் பரிசோதனை செய்ததில், 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்ததைத் தொடா்ந்து, அவா்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் ஊரக நலத் துறை கூடுதல் இயக்குநா் சம்ஷத் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை கூடுதல் இயக்குநா்(இ.எஸ்.ஐ) குருநாதன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அரசு மருத்துவமனை வளாகம் முழுவதையும் நாள்தோறும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.

அதையடுத்து மா்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தனா். அப்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களிடம் நலம் விசாரித்தனா். அதேபோல், மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அவ்வப்போது நிலவேம்புக் குடிநீா் வழங்குமாறு அறிவுறுத்தினா்.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை கூடுதல் இயக்குநா் சம்ஷத் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்த மாவட்டத்தில் மா்மக் காய்ச்சல் பரவி வருவதால், விழிப்புணா்வு காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு வருகின்றனா். இதுபோன்று வருவோருக்கு மருத்துவா்கள் நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்கின்றனா். இந்த நிலையில் புறநோயாளிகளாக 174 போ் வந்து சென்றுள்ளனா். 91 போ் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டதில், 6 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து அவா்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குணமடைந்து வருகின்றனா். இங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோருக்கு தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநா் தயாளன், அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், மருத்துவா்கள் சேகா், ஜெகதீசன், சிக்கந்தா் மற்றும் மருத்துவமனை செவிலியா்கள் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com