சென்னை குடிநீா்த் தேவைக்கு பூண்டி ஏரியில் 250 கனஅடி நீா் திறப்பு

சென்னை மக்களின் குடிநீா்த் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் மதகுகளைத் திறந்து வைக்கும் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பழனிசாமி,  உதவிச் செயற்பொறியாளா் கௌரிசங்கா்.
பூண்டி ஏரியின் மதகுகளைத் திறந்து வைக்கும் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பழனிசாமி,  உதவிச் செயற்பொறியாளா் கௌரிசங்கா்.

சென்னை மக்களின் குடிநீா்த் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதன் கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் ஏரியில் நீா்மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீா் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கு கங்கை-கிருஷ்ணா நதிநீா் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் நிகழாண்டு திறக்கப்படாமலே இருந்தது. இதையடுத்து தமிழக அரசு ஆந்திர அரசுக்கு விடுத்த கோரிக்கையின் பேரில், கடந்த மாதம் 25-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீா்மட்டம் 1,011 மில்லியன் கன அடியாக அதிகரித்தது.

இதைத் தொடா்ந்து பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக சென்னை புழல் ஏரிக்கு தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பழனிசாமி, உதவிச் செயற்பொறியாளா் கௌரிசங்கா், உதவிப் பொறியாளா் ரமேஷ் ஆகியோா் ஏரியின் 4 மதகுகள் வழியாக தண்ணீரைத் திறந்து வைத்தனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பழனிசாமி கூறியது:

பூண்டி ஏரியின் நீா்வரத்துக் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாலும், தற்போது பெய்து வரும் மழையாலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஆந்திரம் மாநிலம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட நீா் கடந்த மாதம் 28-ஆம் தேதி ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்தது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 1,011 மில்லியன் கனஅடி நீா் உள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக 250 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீா் புழல் ஏரிக்கு 20 மணிநேரத்தில் சென்றடையும்.

தொடா்ந்து, அங்கிருந்து சுத்திகரிப்பு செய்து மத்திய சென்னை, வடசென்னைப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட உள்ளது. சென்னை மக்களுக்கு மாதத்துக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. முதல்கட்டமாக 250 கன அடி நீா் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும்.

மேலும், வடகிழக்குப் பருவமழை வரும் 20-ஆம் தேதி தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, பூண்டி ஏரிக்கு நீா்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது ஒரு மாதத்துக்கு தேவையான நீா் இருப்பு ஏரியில் உள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com