கிராமங்களில் காட்சிப் பொருளாகும் சூரிய ஒளி மின்சார தெரு விளக்குகள்: மாயமாகும் மின்சேமிப்பு உபகரணங்கள்

கிராமங்களில் மின் செலவைக் குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சூரிய  ஒளி மின்னுற்பத்தி உபகரணங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில்
கிராமங்களில் காட்சிப் பொருளாகும் சூரிய ஒளி மின்சார தெரு விளக்குகள்: மாயமாகும் மின்சேமிப்பு உபகரணங்கள்


கிராமங்களில் மின் செலவைக் குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சூரிய  ஒளி மின்னுற்பத்தி உபகரணங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடின்றி வீணாகி வருவதாகவும், அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. 
ஒவ்வொரு கிராமங்களிலும் அடிப்படை வசதிகளான தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் எடுக்கவும் உபயோகப்படுத்தப்படும் மின்சாரத்துக்கு மாதந்தோறும் அதிக செலவாகும் சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பல்வேறு வழிகளில் பயன்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மின்தேவை  அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்ப மின்னுற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
இதன்அடிப்படையில், இயற்கையாக சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வோர் ஊராட்சிக்கும் ஆகும் மின் செலவைக்  குறைக்க வாய்ப்புள்ளது.   
இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் தெரு விளக்குகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சிறு குக்கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சிகளில் மட்டும் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. 
  இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் குக்கிராமங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்த மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பேனல்கள், சேமிக்கும் மின்கலன், அதற்கான எல்.ஈ.டி. விளக்குகளுடன் கூடிய மின் கம்பங்கள், அதற்கான மின்வயர்கள் வாங்குவதற்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் அனுமதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குக்கிராமங்களை உள்ளடக்கிய 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.   
இவ்வாறு அமைக்கப்பட்ட உபகரணங்களால் பகலில் சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி செய்து சேமிப்பதன் மூலம் நாள்தோறும் 10 மணி முதல் 11 மணி நேரம் வரை தெரு விளக்குகளுக்குப் பயன்படுத்த முடியும். இத்திட்டத்தைச்  செயல்படுத்திய காலகட்டத்தில் நன்றாக செயல்பாட்டில் இருந்து வந்தது. அதன் மூலம் கிராமங்களில் மின் வசதி இல்லாத நிலையிலும், சூரிய ஒளி மின்சாரம் மூலம் தெரு விளக்குகள் எரிந்தன. அத்துடன், இதற்கு ஒரு முறை முதலீடு செய்தால் போதும். இந்த சூரிய ஒளி மின்சாரம் தயார் செய்யும் அமைப்பு அடுத்த 20 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் தன்மையுடையது. இதை அடிப்படையாகக் கொண்டே அரசுக் கட்டடங்களில் சூரிய மேற்கூரை அமைக்கும் திட்டம், பசுமை குடியிருப்பு மேற்கூரை அமைக்கும் திட்டம், மலைக்கிராமங்களில் தெரு விளக்குகளை எரியவிடும் திட்டங்களுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.
 மாயமாகும் உபகரணங்கள்
திருவள்ளூர் அருகே இத்திட்டம் மூலம் கிளாம்பாக்கம், நெய்வேலி-பூண்டி கூட்டுச் சாலை, ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு நன்றாக செயல்பட்டு வந்தன. ஆனால், தற்போது சூரிய ஒளி மின்சாரம் தயார் செய்யும் பேனல்கள் சேதமடைந்தும், அதுவும் ஆள் இல்லாத இடங்களில் உபகரணங்கள் மற்றும் சேமிப்பு மின்கலன்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
 இதுகுறித்து திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாந்தகுமார் கூறியது:
இத்திட்டம் தொடங்கிய காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் நன்றாக செயல்பட்டது. அதனால் சூரிய ஒளி மின்சாரம் தயார் செய்யும் உபகரணங்கள் மூலம் சேமிக்கப்படும் மின்சாரத்தினால் 10 முதல் 20 தெரு விளக்குகள் வரை எரிந்தன. இதனால் உள்ளாட்சிப் பதவிகளில் ஆள்கள் இருந்த வரை கிராமங்களில் நன்றாக  பராமரிக்கப்பட்டு வந்தது. இதனால் மின்தடைநேரங்களிலும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் தெரு விளக்குகள் எரியவிடப்பட்டன. இதனால் குறிப்பிட்ட அளவு மின் கட்டணமும் குறைந்தது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் ஆள்கள் இல்லாத நிலையில், ஊராட்சி செயலரின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் உள்ளது.  அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துவதால் சூரிய ஒளி மின்சார உபகரணங்களை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. எனவ சூரிய ஒளி மின்கலன்கள் மற்றும் மின்கம்பங்கள் மாயமாகி வருகின்றன. அதனால், அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராம மக்கள் பயன்பெறும் நோக்கில், ஊரக வளர்ச்சி முகமை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களில் எளிதாக நிறுவவும், இயக்கவும் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு என்பதுடன் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது சூரிய ஒளி மின்சாரம் ஆகும். இப்போதுதான் பராமரிக்கவில்லை என்பது கவனத்துக்கு வந்துள்ளது. இதை சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com