சுடச்சுட

    

    வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் காட்சிப் பொருளாக உள்ள கோழி வளர்ப்புக் கூண்டுகள்

    By DIN  |   Published on : 11th September 2019 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tiruvur


     வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் சேதமடைந்து காணப்படும் கூண்டுகளை சீரமைத்து காடை, கோழிகள், அசிலா கோழி வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவள்ளூர் அருகே திருவூரில் கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், 50 ஏக்கரில் நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் உழவர் பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நெல் ஆராய்ச்சியில் புதிய ரகங்களைக் கண்டறிந்து, அதை விவசாயிகள் மூலம் விளைநிலங்களில் பயிரிடுவதற்கு அளித்து, அதன் மூலம் நெல் விதைகளைப் பெருக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஒவ்வொரு ரகத்துக்கும் செயல் விளக்கப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் நோய்களின் தாக்கம், பூச்சி கட்டுப்பாடு, பயிர் பராமரிப்பு, சாகுபடி அதிகரிப்பு, பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
    ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் பல்வேறு பயிர்கள், மூலிகை, காளான் வளர்த்தல் போன்ற வருவாய் ஈட்டும் வகையிலான சிறு தொழில்களுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நேரடியாக செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கும் வகையில் மூலிகைச் செடிகள் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்ப்பு, கால்நடை தீவனமான அசோலா வளர்ப்பு, தேனீக்கள் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல், நர்சரி அமைத்து மரக்கன்றுகள் வளர்ப்பு, கோழிகள், காடைகள், முயல் வளர்ப்பு போன்றவைகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காக இங்கு ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
    வேளாண் தொழிலுடன், துணைத் தொழில்களையும் சேர்த்து செய்தால் போதிய வருவாய் ஈட்ட முடியும். அதனால் விவசாயிகள் சுழற்சி முறையில் காடைகள், கோழிகள் மற்றும் கால்நடைகள் என ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் மேற்கொள்ள விரும்புகின்றனர். 
    இந்நிலையில், கூண்டுகளில் காடைகள், கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது அவசியம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  
    இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேணுகோபால் கூறியது: தற்போதைய நிலையில் விவசாய சாகுபடியில் போதிய வருவாய் கிடைப்பதில்லை. எனவே விவசாயத்துடன் துணைத் தொழில் செய்ய விரும்புகின்றனர். 
    அதனால், நெல் ஆராய்ச்சி நிலையத்தில்  அனைத்து வகைகளுக்கும் செயல் விளக்க திடல் சிறு அளவில் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
    ஆனால், விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வந்த கோழிகள், அசிலா கோழிகள், ஜப்பான் காடைகள், முயல் வளர்ப்புக்கான பகுதியில் கூண்டுகள் மட்டுமே உள்ளன. அதில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும்  வகையிலான வளர்ந்த நிலையில் கோழிகள், காடைகள் ஆகியவை இல்லாத நிலை உள்ளது. விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் பகுதி புதர் மண்டிக் காணப்படுகிறது. அதனால், இப்பகுதியையும், கூண்டுகளையும் சீரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்றார். இதுகுறித்து நெல் ஆராய்ச்சி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் மணிமேகலை கூறியது:
    இங்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 
    இதற்கான ஒவ்வொரு வகைக்கும் செயல்விளக்க திடல் அமைக்கப்பட்டு, அங்கு விவசாயிகளை அழைத்துச் சென்று விவரமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 
    இதில், அசிலா கோழிகள், நாட்டு கோழிகள், ஜப்பான் கடைகள் கூண்டுகளில் வளர்ந்த நிலையில் விற்பனை செய்யப்பட்டது. அசிலா கோழிகள், நாட்டுக்கோழிகள், ஜப்பான் காடை குஞ்சுகளை விரைவில் வாங்க உள்ளோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai