ஏரிகள், கால்வாய்களில் நட ஒரு லட்சம் பனை விதைகள் தயார்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் கால்வாய்களின் இரு கரைகளிலும் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்து நீரைச் சேமிக்கும் வகையில், ஒரு லட்சம்
ஏரிகள், கால்வாய்களில் நட ஒரு லட்சம் பனை விதைகள் தயார்


திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் கால்வாய்களின் இரு கரைகளிலும் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்து நீரைச் சேமிக்கும் வகையில், ஒரு லட்சம் பனை விதைகள் நடுவதற்கு தயாராக உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அமைத்தல் போன்றவற்றுக்காக மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு வளர்க்க மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அந்த வகையில், ஏரி, குளங்களைப் பாதுகாக்கும் வகையில் பனை விதைகள் நட ஏற்பாடு செய்யப்படுகிறது. அதேபோல், இந்த  மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் மரக்கன்றுகள், ஒரு லட்சம் பனை விதைகள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற பனை விதைகள் மூலம் வருங்காலத்தில் ஏரி, குளங்களில் மழை நீரை வீணாக்காமல் சேமித்து  வைக்க முடியும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 526 பெரிய ஏரிகள் உள்ளன. 
அதேபோல், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 634 சிறு பாசன ஏரிகள் மற்றும் 3,600 குளம், குட்டைகளும் உள்ளன. இந்த ஏரிகளில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளாத காரணத்தால் அதிக அளவில் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையுள்ளது. அதிலும், ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரிகளில் அதிகளவில் நீரைத் தேக்கி வைக்க முடியாமல், விவசாயத்துக்கும், கிராமங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. 
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர் ஆதாரம் வெகுவாகக் குறைந்தது. எனவே இனிமேல் வருங்காலங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதற்காக அரசு மராமத்துப் பணிகள் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  
இதுகுறித்து பொதுப்பணித் துறை நீர்வளத்துறை (கொசஸ்தலை ஆறு) அதிகாரி ஒருவர் கூறியது:
ஏரி குளங்கள் மற்றும் கால்வாய்களில் பல்வேறு நன்மைகளைத் தரும் பனை விதைகளை நடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஏரி குளங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இதன் அடிப்படையில் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பனை விதைகள் வந்துள்ளன. இந்த விதைகளை தனித்தனியாகப் பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பனை விதைகள் கால்வாய்களின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் எல்லைகளாக நடப்பட உள்ளன. 
இந்த விதைகள் வளர்ந்து வரும் பட்சத்தில் மண் அரிப்பைத் தடுத்து நீரை சேமித்து வைக்கும் தன்மையுடைய மரமாகும். அத்துடன் வளர்ந்தால் கால்வாய்களின் எல்லைகளை எளிதில் கண்டறியவும் முடியும். 
அதைத் தொடர்ந்து, யாரும் ஆக்கிரமிப்புச் செய்ய முடியாது. இந்த விதைகளை நடுவதன் மூலம் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com