தச்சூர்-சித்தூர் 6 வழிச்சாலையைக் கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் சித்தூர் வரையில் அமைக்கப்படவுள்ள 6 வழிச் சாலையை தடை செய்யவும், விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கைவிடக் கோரியும்
தச்சூர்-சித்தூர் 6 வழிச்சாலையைக் கைவிடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை


திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் சித்தூர் வரையில் அமைக்கப்படவுள்ள 6 வழிச் சாலையை தடை செய்யவும், விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கைவிடக் கோரியும் ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம், சித்தூர் வரை சுமார் 128 கி.மீ. தூரம் வரை புதிதாக 6-வழிச் சாலை அமைக்க ரூ. 3 ஆயிரம் கோடியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இப்பகுதியில் விவசாயத்தை நம்பியே விவசாயிகளின் வாழ்வாதாரம் இருந்து வருகிறது. மேலும், இந்த திட்டத்தால் விவசாயிகள் மூன்று போகம் விளையும் 900 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், வனப்பகுதி  உள்பட 80 ஏக்கர் நிலங்கள் பாதிக்கிறது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டபோது, இத்திட்டத்துக்கு விவசாயிகள் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விளைநிலங்களையும், நீர் நிலைகளையும் அழிப்பதைத் தவிர்க்க 6 வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட்டு, ஜனப்பன் சத்திரம் கூட்டுச் சாலை முதல் ரேணிகுண்டா வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும். 
அதேபோல், விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதைக் கைவிட்டுவிட்டு சாலை ஓரங்களில் பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும். காலாவதியான இந்திய தந்தி சட்டம் 1885-இன்படி விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பது, மின் பாதையை ஏற்படுத்தும் ஏதேச்சதிகாரப் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், பொருளாளர் சி.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட துணை நிர்வாகிகள் பி.ரவி, எம்.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
அதைத் தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் தடையை மீறி உள்ளே சென்ற விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் வந்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com