தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்புப் போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே தொடர் மின்வெட்டைக் கண்டித்து 4 ஊராட்சிகளைத் சேர்ந்த வியாபாரிகள் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி அருகே தொடர் மின்வெட்டைக் கண்டித்து 4 ஊராட்சிகளைத் சேர்ந்த வியாபாரிகள் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்பாக்கம், தோக்கம்மூர், எகுமதுரை, பூவலை ஆகிய 4 ஊராட்சிகளைச் சேர்ந்த 25 கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக சரிவர மின்சாரம் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களாக பகல் நேரத்தில் மின்சாரம் அடிக்கடி தடைபட்டு வந்தது. இரவு நேரத்தில் பெரும்பாலும் 8 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. 
ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே பிரச்னை காரணமாக அனைத்து  வியாபாரிகள் சங்கத்தினர் ஆரம்பாக்கத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். 
அப்போது, எளாவூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் ஆரம்பாக்கத்துக்கு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக மின்சாரம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
இதனால் மின்வாரியத்தைக் கண்டித்து, ஆரம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள், தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் ஆரம்பாக்கம், தோக்கம்மூர், பூவலை, எகுமதுரை கிராம மக்கள் ஆரம்பாக்கம் பஜாரில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆரம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் ஏ.எஸ்.கோபால் தலைமை வகித்தார். துணைச் செயலர் ஏ.எம்.முகம்மது ரபீக் வரவேற்றார். தலைவர் முருகேசன், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சங்கத் தலைவர் ஆறுமுகம், ஆரம்பாக்கம் பொதுநல சங்கச் செயலர் காமராஜ், வியாபாரிகள் சங்க நிர்வாகி சம்பந்தம், பரணிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர் ஏ.வி.ராமகிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக செயலர் மு.மணிபாலன், விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் துளசி நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சம்பத், ரவிக்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பன்னீர் செல்வம், வருவாய் ஆய்வாளர் ரதி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், ஆரம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் சத்யமூர்த்தி ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆரம்பாக்கத்தில் புதிய மின் கம்பங்கள், மின் பாதை சீரமைக்கும் பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும். அதன்பின் சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.
குறிப்பிட்ட காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மின் கட்டணத்தைச் செலுத்தாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com