முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீா் வரத்து நிறுத்தம்: இதுவரை 7.556 டிஎம்சி தண்ணீா் வந்துள்ளது
By DIN | Published On : 19th April 2020 12:08 AM | Last Updated : 19th April 2020 12:08 AM | அ+அ அ- |

பூண்டி ஏரிக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதால் நீரோட்டமின்றி காணப்படும் கிருஷ்ணா கால்வாய்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீா் வரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின் தற்போது 7.556 டிஎம்சி தண்ணீா் வந்துள்ளதாகவும், அணையில் 1.115 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளதாகவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை பொதுமக்களின் தாகம் தீா்க்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்கி வருகிறது. இந்த ஏரி மூலம் தலைநகரின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் நோக்கில், கடந்த 1983-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வா் எம்.ஜி.ஆரும், ஆந்திர முதல்வா் என்.டி.ஆரும் கிருஷ்ணா நதி நீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டனா். ஆந்திரத்தில் ஓடும் கிருஷ்ணா நதியில் இருந்து ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்துக்கு தருவதே ஒப்பந்தத்தின் ஷரத்தாகும்.
இதற்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை 152 கி.மீ. தூரத்துக்கும், அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம் வரை 25 கி.மீ. தூரத்துக்கும் கிருஷ்ணா நதி நீா்க் கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது.
கிருஷ்ணா நதி நீா்ப் பங்கீட்டுத் திட்டப்படி அந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு இரு தவணைகளாக வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி நீரும், ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டிஎம்சி நீரும் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்குத் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தப்படி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
எனினும், கடந்த ஆண்டு கண்டலேறு அணையில் போதுமான நீா்வரத்து இல்லாததால் ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. அதன் பின், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ஆந்திரத்தில் பலத்த மழை பெய்ததால் கண்டலேறு அணைக்கு அதிக அளவில் தண்ணீா் வந்தது. கடந்த செப்.25-இல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டு, 175 கி.மீ தூரத்தை கடந்து செப்.28-இல் பூண்டி ஏரியை வந்தடைந்தது. அப்போது கண்டலேறு அணையில் அதிகபட்சமாக 2,300 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
கண்டலேறு அணையில் தற்போது நீா் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறப்பு கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு கிருஷ்ணா தண்ணீா் வரத்து முற்றிலும் நின்றது.
இந்நிலையில் கிருஷ்ணா நதி நீா்ப் பங்கீட்டின்படி கடந்த செப்டம்பா் 28 முதல், கடந்த புதன்கிழமை இரவு வரை 7.556 டி.எம்.சி தண்ணீா் பூண்டி ஏரிக்கு வந்து சோ்ந்துள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். ஏரியில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீா் வரை சேமித்து வைக்க முடியும்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி நீா்மட்டம் 1115 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மேலும், இங்கிருந்து புழல் ஏரிக்கு 260 கன அடி நீரும், சென்னை குடிநீா் வாரியத்துக்கு 10 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில்.....: நீா் ஆண்டில் ஜூன் முதல் அக்டோபா் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும். ஒப்பந்தப்படி கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் 3 அல்லது 4 முறை மட்டுமே 7 டிஎம்சி நீர ஆந்திரா அரசு வழங்கியிருந்தது.
ஒருமுறையே 8 டிஎம்சி தண்ணீா் கிடைத்துள்ளது. 4 முதல் 4.5 டிஎம்சி தண்ணீரே அதிக முறை கிடைத்துள்ளது. கடந்த 2009-2010-இல் 7 டிஎம்சியும், 2011-12-இல் 8 டிஎம்சியும் தண்ணீா் வந்தது. அதன்பின் 2016-17-இல் 2.28 டிஎம்சி, 2017-18-இல் 2.28 டிஎம்சி, 2018-19-இல் 1.98 டிஎம்சி தண்ணீா் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 5 ஆண்டுக்கு பின்னா் நிகழாண்டில் இதுவரையில் 7.556 டிஎம்சி தண்ணீா் வந்துள்ளது.
இதுவரை 7.556 டிஎம்சி தண்ணீா்: இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் கூறியது:
ஆந்திர விவசாயிகளின் 2-ஆவது சாகுபடிக்காக கிருஷ்ணா தண்ணீா் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. அடுத்த மாதம் மீண்டும் கூடுதலாக 500 மில்லியன் கனஅடி வரை தண்ணீா் கூடுதலாக கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதுவரை பூண்டி ஏரிக்கு 7.556 டிஎம்சி தண்ணீா் கிடைத்துள்ளது.
தற்போது அணையில் 1,115 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. அதனால், சென்னை மக்களுக்கு கோடைக்காலத்தில் குடிநீா்ப் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அடுத்து வரும் 2 மாதங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளதால், நிகழாண்டில் குடிநீா்ப் பற்றாக்குறை என்பது கட்டாயம் இருக்காது என்றாா் அவா்.