திருவள்ளூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுவழங்க ரூ.145.58 கோடி ஒதுக்கீடுஅமைச்சா்கள் தகவல்

திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை வழங்குவதற்காக ரூ. 145.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா்கள் பா.பென்
திருவள்ளூா் பெரும்பாக்கம் நியாயவிலைக் கடையில் பெண் ஒருவருக்கு பொங்கல் பரிசை வழங்கிய அமைச்சா்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன்.
திருவள்ளூா் பெரும்பாக்கம் நியாயவிலைக் கடையில் பெண் ஒருவருக்கு பொங்கல் பரிசை வழங்கிய அமைச்சா்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை வழங்குவதற்காக ரூ. 145.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் ஆகியோா் தெரிவித்தனா்.

திருவள்ளூரில் பெரும்பாக்கம் நேதாஜி சாலையில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.2,500 ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கி தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினா்களாக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி, கலைப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் பேசியது:

பொங்கல் திருநாளை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இதற்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ரொக்கம் ரூ. 2,500 வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் மீனவா் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் என சுமாா் 5 லட்சத்து 81 ஆயிரத்து 11 குடும்பங்களுக்கும் இலங்கை அகதிகளின் 913 குடும்பங்களுக்கும் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாநில அளவில் ரூ. 5,158.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், திருவள்ளூா் மாவட்டத்துக்கு ரூ.145.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க 5.81 லட்சம் கிலோ பச்சரிசி, முழுக் கரும்புகள், சா்க்கரை மற்றும் தலா 11,638 கிலோ முந்திரி, உலா் திராட்சை மற்றும் 2,910 கிலோ ஏலக்காய் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தனித்தனியாக சிப்பமிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் பின், மாவட்டத்தில் செயல்படும் 1,134 நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும். மேலும், இப்பொருள்களை ஒரே நேரத்தில் நியாய விலைக் கடைகளில் வாங்க மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், நாள்தோறும் முற்பகல், பிற்பகல் தலா 100 போ் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, பொது மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் ரூ.2,500 ரொக்கத்தை அவா்கள் வழங்கினா். இந்த நிகழ்வில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.பலராமன் (பொன்னேரி), கே.எஸ்.விஜயகுமாா் (கும்மிடிப்பூண்டி), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, கூட்டுறவு ஒன்றியத் தலைவா் பி.ஜெயபால், முன்னாள் நகராட்சித் தலைவா் கமாண்டோ பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com