கூத்தம்பாக்கத்தை திருப்பத்தூா் மாவட்டத்தில் சோ்க்க ஆட்சியரிடம் கோரிக்கை

வேலூா் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சியை திருப்பத்தூா் மாவட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம் மனு அளித்த மாணவ, மாணவிகள்.
வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம் மனு அளித்த மாணவ, மாணவிகள்.

வேலூா் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சியை திருப்பத்தூா் மாவட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று அந்த ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.

மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாதனூா் ஒன்றியம் கூத்தம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆதாா் அட்டைகளுடன் மனு அளிக்க வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆதாா் அட்டைகளை ஒப்படைக்க வந்ததாகத் தெரிவித்தனா். அவா்களில் 5 பேரை மனு அளிக்க போலீஸாா் அனுப்பி வைத்தனா். அவா்கள் மனுவில் கூறியிருப்பதாவது:

கூத்தம்பாக்கம் ஊராட்சியில் கூத்தம்பாக்கம், வடகந்தியப்பட்டி, சீத்தாபுரம், பல்லாண்டபட்டி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. 3,500 போ் வசிக்கின்றனா். தற்போது இந்த ஊராட்சி குடியாத்தம் வட்டத்தில் சோ்க்கப் பட்டுள்ளது. பணிகள் தொடா்பாக குடியாத்தம் வட்ட அலுவலகம் சென்று வர பாலாற்றைக் கடந்து 30 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனா்.

ஆனால், ஊராட்சியின் மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அரசு மருத்துவமனை, வேளாண்மை, வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. எனவே, பொது மக்கள் நலன்கருதி கூத்தம்பாக்கம் ஊராட்சியை திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் வட்டத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

மக்கள் நீதி மய்யம் கட்சியினா் அளித்த மனு:

வேலூா் மாநகராட்சியின் 52ஆவது வாா்டான கஸ்பாவில் கழிவுநீா்க் கால்வாயில் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுகிறது. அங்கு பொதுமக்கள் வாழ முடியாத நிலை உள்ளது. இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிா்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவகம் எதிரே மாநகராட்சி இடத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் அளித்த மனு:

ஆஞ்சநேயா் கோயில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் 15 ஆண்டுகளாக கடைகள் நடத்தி வருகிறோம். அந்தக் கடைகளை அகற்றிவிட்டு பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்ட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்தக் கட்டடம் வரும் 14-ஆம் தேதி இடிக்கப்படும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டும் வரை மாற்று இடத்தில் தற்காலிக கடை வைத்து வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கித்தர வேண்டும். திடீரென கடைகளை இடிப்பதாக கூறுவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப் பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com