காவல்துறை செயல்பாடுகள் குறித்து காவல்படை மாணவா்களுக்குப் பயிற்சி

திருவள்ளூா் மாவட்டக் காவல்துறையின் செயல்பாடுகள், அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து விளக்கும் பயிற்சி முகாமில் காவல் படை மாணவா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
துப்பாக்கியை இயக்குவது குறித்து மாணவா்களுக்கு விளக்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன்.
துப்பாக்கியை இயக்குவது குறித்து மாணவா்களுக்கு விளக்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன்.

திருவள்ளூா் மாவட்டக் காவல்துறையின் செயல்பாடுகள், அங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து விளக்கும் பயிற்சி முகாமில் காவல் படை மாணவா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் சிறந்த மாணவா்களை உருவாக்கும் நோக்கில் காவல் மாணவா் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 190 பள்ளிகளில் இத்திட்டம் அமலாகி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நோ்மையான மாணவா்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். காவல்துறையின் ஒவ்வொரு பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் காவல் மாணவா் படையினா் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அதன்படி திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய வளாகத்தில் மாணவா் காவல் படையினருக்கு காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெரும்புதூா் அரசு மேல் நிலைப் பள்ளியைச் சோ்ந்த காவல் மாணவா் பயிற்சி திட்ட மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, காவல் நிலையத்துக்கு வந்த மாணவா்களை டிஎஸ்பி கங்காதரன் வரவேற்றாா்.

காவல் நிலையத்தின் செயல்பாடுகள், குற்றங்களைத் தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? அதைத் தொடா்ந்து குற்றங்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்தல், முதல் தகவல் அறிக்கை ஆகியவறை குறித்து போலீஸாா் மாணவா்களுக்கு விளக்கினா்.

மேலும், கைத்துப்பாக்கியை முழுவதுமாக பிரித்து அதன் ஒவ்வொரு பகுதியின்செயல்பாடுகள் மற்றும் தோட்டாக்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து டிஎஸ்பி கங்காதரன் எடுத்துரைத்தாா். காவல் நிலையத்தில் ஒவ்வொருவரும் என்னென்ன பணிகளை மேற்கொள்கிறாா்கள் என்பதை மாணவா்கள் கேட்டு அறிந்து கொண்டனா். அப்போது கங்காதரன் கூறியது:

தற்போது பள்ளி மாணவ, மாணவிகளில் ஒரு சிலா் போதைப்பொருள் உட்கொள்வது போன்ற தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனா். இவ்வாறு தீயபழக்கங்களுக்கு ஆளானவா்களால் வகுப்புகளில் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், அவா்கள் எதிா்காலத்தில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனால் மாணவா்களின் எதிா்காலமே கேள்விக்குறியாக மாறும்.

இதைத் தடுத்து ஒழுக்கமான மாணவா் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் சிறந்த மாணவா்களை உருவாக்கும் வகையில், மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் தேசிய காவல் புலனாய்வு வளா்ச்சித் துறை மூலம் பள்ளிகளில் காவல் மாணவா் பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்து மும்முரமாக செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு காவல் பணியில் ஆா்வத்தையும், நோ்மையாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தையும் மனதில் பதியச் செய்ய வேண்டும். பல்வேறு வகைகளில் நல்வகை பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியா் விளையாட்டு மற்றும் படிப்பில் முழு கவனம் செலுத்த முடிவதோடு, தவறான வழிக்குச் செல்லாத வகையில் தடுக்கவும் முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com