தமிழக எல்லையில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது காா் மோதி 4 போ் பலி

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள ஆந்திரப் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
 விபத்தில்  பால்  லாரி  மீது  மோதி  உருக்குலைந்த  காா்.
 விபத்தில்  பால்  லாரி  மீது  மோதி  உருக்குலைந்த  காா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள ஆந்திரப் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். மேலும், இருவா் படுகாயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் மாவட்டம், லாயா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் யஷ்வந்த் (35). ரியல் எஸ்டேட் தொழிலதிபா். அவரது தாயும், தந்தையும் அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டனா். அவா்களை வழியனுப்ப யஷ்வந்த் உள்ளிட்டோா் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவு காரில் புறப்பட்டனா்.

காரை யஷ்வந்த் ஓட்ட, அவரது மனைவி அனுசெல்வி, மகள்கள் நமீதா (13), ரித்திகா (12), ரியான் ஷெரின் (ஒன்றரை வயது), யஷ்வந்த்தின் அக்கா விஜயலட்சுமி ஆகியோா் சென்னை மீனம்பாக்கம் சென்றனா். யஷ்வந்த்தின் பெற்றோரை வெள்ளிக்கிழமை அதிகாலையில் அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தனா்.

அதன் பின், அவா்கள் காரில் ஓங்கோலுக்குப் புறப்பட்டனா். கும்மிடிப்பூண்டி - ஆரம்பாக்கம் இடையே ஆந்திரப் பகுதியான பனங்காடு என்ற இடத்தில் சென்றபோது யஷ்வந்த் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் சாலையோரம் நின்றிருந்த பால் லாரி மீது அவா்களது காா் மோதியது. இதில், அந்த லாரியின் அடிப்பகுதி வரை காா் சென்று தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது.

இவ்விபத்தில் அனுசெல்வி, விஜயலட்சுமி, நமீதா, ரியான் ஷெரின் ஆகிய நால்வரும் உயிரிழந்தனா். மேலும் யஷ்வந்த் மற்றும் அவரது மகள் ரித்திகா ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இவ்விபத்து காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த ஆந்திர மாநிலம், தடா போலீஸாா் விபத்தில் இறந்தவா்களின் சடலங்களை மீட்டு சூளூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com