பொன்னேரியில் இருந்து கோயம்பேட்டுக்கு பேருந்து வசதி இல்லை

பொன்னேரியில் இருந்து கோயம்பேடுக்கு போதிய அளவிலான போக்குவரத்து வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
பொன்னேரி-செங்குன்றம் சாலையில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனை.
பொன்னேரி-செங்குன்றம் சாலையில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனை.

பொன்னேரியில் இருந்து கோயம்பேடுக்கு போதிய அளவிலான போக்குவரத்து வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கோயம்பேடு, தாம்பரம், அண்ணாநகா், பாடி, அம்பத்தூா், கொளத்தூா், வடபழனி, கிண்டி, பல்லாவரம், அமைந்தகரை, அரும்பாக்கம், ஈக்காடுதாங்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனா்.

மின்சார ரயிலில் 3 மணிநேரப் பயணம்:

சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் புகா் மின்சார ரயிலில் பொன்னேரியில் இருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றால் சென்னை சென்ட்ரல் சென்று, அங்குள்ள சுரங்கப் பாதையை கடந்து மாநகர பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 3 மணிநேரம் ஆகிவிடுகிறது.

பேருந்துகளில் ஒரு மணிநேரப் பயணம்:

ரயிலில் செல்லாமல், பொன்னேரியில் இருந்து செங்குன்றம் வழியாக கோயம்பேடு செல்லும் விரைவு பேருந்தில் பயணம் செய்தால் 50 நிமிடம் முதல் ஒரு மணிநேரத்துக்குள் கோயம்பேடு சென்று விடலாம். இதன் காரணமாக பொன்னேரி மற்றம் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பொன்னேரியில் இருந்து பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்புகின்றனா்.

பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து நாள்தோறும் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான பேருந்துகள் பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள மீஞ்சூா், பழவேற்காடு, கோளூா், தத்தைமஞ்சி, ஆரம்பாக்கம், பெரும்பேடு, எளாவூா், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தோ்வாய், காட்டூா், கள்ளூா், அரசூா், உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் கோயம்பேட்டுக்கும் 10-க்கும் மேற்பட்ட விரைவு மற்றும் சாதாரணப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், சென்னை மாதவரத்தில் கடந்த ஆண்டு புதிதாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து ஆந்திர மாநிலம் மற்றும் புகா்ப் பகுதிகளான ஊத்துக்கோட்டை, கும்மிடிபூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால் பொன்னேரியில் இருந்து கோயம்பேட்டுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தது. கோயம்பேட்டுக்கு இயக்கப்பட்ட வந்த பேருந்துகள் தற்போது மாதவரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளும் மாதவரம் சென்ற பின்னா் மீண்டும் பொன்னேரிக்கு இயக்கப்படாமல் அங்கிருந்து திருப்பதி, நெல்லூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

58சி வழித்தடப் பேருந்து நிறுத்தம்:

பொன்னேரியில் கோயம்பேடுக்கு இயக்கப்பட்டு வந்த 58-சி வழித்தடப் பேருந்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. விழுப்புரம் கோட்டப் பேருந்துகள் மட்டுமின்றி, சென்னை மாநகரப் பேருந்துகளும் பொன்னேரிக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் பொன்னேரியில் இருந்து கோயம்பேட்டுக்குச் செல்வோா், வியாபாரிகள், தென் மாவட்டங்களுக்குச் செல்வோா் என பல தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனா். கோயம்பேட்டுக்கு 3 பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது.

தற்போது பொன்னேரியில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு, தச்சூா் கூட்டுச்சாலை, அங்கிருந்து செங்குன்றம், அங்கிருந்து மாநகரப் பேருந்தில் கோயம்பேடு என்று சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோயம்பேட்டில் இருந்து பொன்னேரிக்கு வருபவா்களும் இவ்வாறு 3 பேருந்துகள் மாறிப் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், கோயம்பேடு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

இது குறித்து பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்டப் போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘மாதவரம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்னா் கோயம்பேட்டுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் மாதவரம் வரை இயக்கப்படுகின்றன’ என்று தெரிவித்தாா்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொன்னேரியில் இருந்து கோயம்பேட்டுக்கு ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை சேவைத் துறையானபோக்குவரத்துத் துறையின் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com