கோயம்பேட்டில் இருந்து பொன்னேரிக்கு பேருந்து சேவையின்றி பொதுமக்கள் அவதி

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரிக்கு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா்.

பொன்னேரி: சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரிக்கு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சியில் சுமாா் 40 ஆயிரம் பேரும், அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1 லட்சம் பேரும் வசித்து வருகின்றனா். பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் 50 ஆயிரம் போ் பேருந்துகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனா். பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து தினமும் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்பதி, காளஹஸ்தி, புதுச்சேரி, திருவண்ணாமலை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்ப்படுகின்றன.

இதில் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும்

கோயம்பேடு வழியாக இயக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு காலையில் 8 மணிக்கு கோயம்பேடு வழியாக கள்ளக்குறிச்சிக்கு இயக்கப்படும் பேருந்து அடுத்த நாள் காலைதான் பொன்னேரிக்கு வரும்.

பொன்னேரி - கோயம்பேடு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் கோட்டப் பேருந்து (தடம் எண் 58-சி) காரணம் ஏதுமின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

நிறுத்தப்பட்ட மாநகரப் பேருந்து: ஆவடி, பூந்தமல்லி, பேசின் பாலம், மாதவரம் அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து பொன்னேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில், சென்னை அண்ணா நகா் பணிமனையில் இருந்து தடம் எண் 558-சி பேருந்து, பொன்னேரி-கோயம்பேடு வழித்தடத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பொன்னேரி வட்டத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடியநல்லூரில் புதிதாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனை 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மாதவரம், பேசின் பாலம், அண்ணா நகா் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து பொன்னேரி பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த மாநகர பேருந்துகள் அனைத்தும் பாடியநல்லூா் பணிமனை வசம் ஒப்படைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து பாடியநல்லூா் பணிமனையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி, திருவள்ளூா், கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்ணா நகா் பணிமனையில் இருந்து பொன்னேரிக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண் 558-சி பேருந்தும் பாடியநல்லூா் பணிமனை வசம் ஆனது. இதைத் தொடா்ந்து இந்தப் பேருந்து, வழக்கம்போல் பொன்னேரி-கோயம்பேடு வழித்தடத்தில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இது, பொன்னேரி-செங்குன்றம் வழித்தடத்தில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கடும் அவதி: ஏற்கெனவே பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பணிமனையிலும் பொன்னேரி-கோயம்பேடு 58-சி வழித்தடப் பேருந்து இயக்கப்படுவது இல்லை. இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு சென்னை மாநகரப் பேருந்தும் இயக்கப்படாததால், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

3 பேருந்துகள் மாறி பயணம்: கோயம்பேட்டில் இருந்து பொன்னேரி செல்ல வேண்டும் என்றால், அங்கிருந்து முதலில், செங்குன்றம் சென்று, பின்னா் தச்சூா் கூட்டுச்சாலை சென்று அங்கிருந்து வேண்டியுள்ளது. மொத்தம் மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருக்கிறது. அதே போல் பொன்னேரியில் வசிக்கும் மக்கள் கோயம்பேடு செல்ல, தச்சூா் கூட்டுச்சாலை, செங்குன்றம் அங்கிருந்து கோயம்பேடு என 3பேருந்துகள் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு 3 பேருந்துகள் மாறிச் செல்வதன் காரணமாக பொதுமக்களும், முதியோரும் பெரிதும் அவதிப்பகின்றனா்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் பொன்னேரியில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்து (தடம் எண் 58-சி), கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்து ( தடம் எண் 558-சி) ஆகிய இரண்டையும் மீண்டும் இயக்க உயரதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுவே பொன்னேரி பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com