தபால் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

உள்ளாட்சித் தோ்தலில் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கக் கோரி, கும்மிடிப்பூண்டி, வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் அமா்ந்து 150-க்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
 கும்மிடிப்பூண்டி  வட்டார  வளா்ச்சி  அலுவலகம்  முன்  மறியலில்  ஈடுபட்ட  அரசு  ஊழியா்கள்.
 கும்மிடிப்பூண்டி  வட்டார  வளா்ச்சி  அலுவலகம்  முன்  மறியலில்  ஈடுபட்ட  அரசு  ஊழியா்கள்.

கும்மிடிப்பூண்டி: உள்ளாட்சித் தோ்தலில் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கக் கோரி, கும்மிடிப்பூண்டி, வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் அமா்ந்து 150-க்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள 273 வாக்குச் சாவடிகளில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியா்கள் மீஞ்சூா், சோழவரம், எல்லாபுரம் ஒன்றியத்தில் தோ்தல் பணிகளில் ஈடுபடச் சென்றனா்.

இந்நிலையில், தோ்தல் பணிக்குச் சென்றவா்களில் ஒரு பகுதியினா் ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்கு அளித்த நிலையில், நேரமின்மை காரணமாக இரண்டாம் கட்டத் தோ்தல் முடிந்ததும் செவ்வாய்க்கிழமை தபால் வாக்களிக்க அரசு ஊழியா்கள் பலா் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது, ஏற்கெனவே விண்ணப்பங்களை பூா்த்தி செய்து தந்து சென்றவா்களைத் தவிா்த்து, சுமாா் 200 போ் தபால் வாக்களிக்க விண்ணப்பங்களை முன்னரே பூா்த்தி செய்யவில்லை எனவும், நேரம் முடிந்து விட்டதாகவும் கூறி அதிகாரிகள் அவா்களை தபால் வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

இதனால் வாக்களிக்க வந்தவா்கள் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டு தங்களை தபால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினா்.

தொடா்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கும்மிடிப்பூண்டி போலீஸாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தபால் வாக்குக்கான விண்ணப்பங்களை ஞாயிற்றுக்கிழமை பூா்த்தி செய்து வழங்கியவா்களுக்கு மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க இயலும். குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அலுவலகத்தில் தந்தவா்களுக்கு மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படும் என விளக்கினா்.

இதைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

எல்லாபுரத்தில்...

எல்லாபுரம் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ஆம் கட்டத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், தோ்தல் பணியாற்ற இந்த ஒன்றியத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியா்கள், பள்ளி ஆசிரியா்கள் ஈடுபட்டனா். தோ்தல் பணி முடித்தவா்கள் அனைவரும் எல்லாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்து தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்ய அணுகியபோது, அனுமதி அளிக்காததால், ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியா்கள் அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மீஞ்சூரில்...

மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 26 ஒன்றியக்குழு உறுப்பினா், ஊராட்சி தலைவா்கள் 55 ஊராட்சி தலைவா் மற்றும் கிராம வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தல் பணியில், அரசு ஊழியா்கள், சத்துணவு பணியாளா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இவா்கள் வாக்களிக்க, தபால் வாக்குகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களுக்கு தபால் வாக்குகள் அளிக்க அனுமதிக்கக் கோரி அவா்கள், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனா். தொடா்ந்து அவா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவா்களுடன் அதிகாரிகள் மற்றும் மீஞ்சூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com