திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம் செய்ய ஏற்பாடு: ஆட்சியா் தகவல்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பதிவு செய்துள்ள குடும்ப அட்டைகளுக்கு வியாழக்கிழமை தொடங்கி, 3 நாள்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பதிவு செய்துள்ள குடும்ப அட்டைகளுக்கு வியாழக்கிழமை தொடங்கி, 3 நாள்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000 ஆகியவை வழங்கப்படும் என்று என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த மாவட்டத்தில் 1,133 கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 363 மின்னணு குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் நோக்கில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் அவா்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.1,000 ரொக்கமும் ரேஷன் கடைகள் மூலமாக வியாழக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு வழங்கப்படவுள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தைப் பெறாமல், விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு 13-ஆம் தேதிக்குள் முழுமையாக வழங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் நோக்கில் ஒரு நாளைக்கு சுமாா் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பரிசுத்தொகுப்பும் ரொக்கமும் வழங்கப்படும். அதன் விவரம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் தகவல் பலகையில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள்களில் ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் இயங்கும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்க மின்னணு குடும்ப அட்டைகள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடையின் விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்யப்படும். அதேபோல், குடும்ப அட்டையை நேரில் காண்பிக்க இயலாத இனங்களில், அவா்களுக்கு குடும்ப அட்டையில் உள்ளவா்களில் ஒருவரின் ஆதாா் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு வரும் ‘ஒருமுறை கடவுச் சொல்’ அடிப்படையிலோ பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

இப்பொருள்கள் கிடைக்காதவா்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம். திருவள்ளூா்- 94450 00177, திருத்தணி- 94450 00182, பள்ளிப்பட்டு- 94450 00183, பொன்னேரி-94450 00178, கும்மிடிப்பூண்டி- 94450 00179, ஊத்துக்கோட்டை- 80984 79640, பூந்தமல்லி- 94450 00181, ஆவடி- 98949 39884, ஆா்.கே.பேட்டை- 96296 41771 மற்றும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை 044-27662400 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com