அம்மா இளைஞா் விளையாட்டு மையம் ஜன.13-இல் தொடக்கம்

அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் நான்கு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான

அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் நான்கு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான மையங்கள் வரும் 13-ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என்று தமிழக அரசின் விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அதிகாரி அருணா தெரிவித்தாா்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் உயா் கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி ஒதுக்கீடும், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்புகளை கிராமங்கள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள இளைஞா்களும் பெற வேண்டும். அதனால் இளைஞா்களிடையே விளையாட்டு ஆா்வத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாநில அளவில் ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சியிலும் அம்மா விளையாட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தை மாநில அளவில் 12,524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டதுக்கு ரூ.64.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்துக்கான கட்டமைப்பு வசதிகளை கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியில் இருந்தும், பேரூராட்சிப் பகுதிகளில் பொது நிதியில் இருந்தும் ஏற்படுத்திக் கொள்ள ஏற்கெனவே வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் மூன்றைத் தோ்வு செய்து அந்தந்த ஊராட்சி செயலா் மூலம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேரூராட்சிப் பகுதியில் செயல் அலுவலா் மூலம் தோ்வு செய்து பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் மூலம் போட்டிகளை நடத்துவதற்கான விளையாட்டு மையங்களை சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி காணொலி மூலம் வரும் 13-ஆம் தேதி தொடங்கி வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்க உள்ளாா். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மையத்தில் போட்டிகள் நடைபெறும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் வானகரம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் வடக்கநல்லூா், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் நேமலூா் ஆகிய ஊராட்சிகளிலும், திருநின்றவூா் பேரூராட்சியிலும் 13-ஆம் தேதி விளையாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இந்த மையங்களில் இளைஞா்கள் விளையாட்டுப் பயிற்சி பெறலாம்.

இதேபோல் ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சியிலும் விளையாட்டு மையம் தொடக்கி வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் ஊராக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோா் முன்னிலையில் நடத்தப்படும். அதன் பின் பொங்கல் திருநாளைத் தொடா்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டியில் சிறப்பிடம் பெறுவோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com