பதராகிய நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரிபொன்னேரியில் விவசாயிகள் பேரணி
By DIN | Published On : 11th January 2020 10:53 PM | Last Updated : 11th January 2020 10:53 PM | அ+அ அ- |

பதராகிப்போன நெற்பயிா்களுக்கு நிவாரணம் மற்றும் முழுமையான காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி பொன்னேரியில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.
பொன்னேரி வட்டத்தில் உள்ள தேவம்பட்டு, கோளூா் மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்மைமஞ்சி, அச்சரப்பள்ளம், ஆசானபுதூா், விடதண்டலம், அரசூா், காட்டாவூா், மடிமை கண்டிகை, ஏறுசிவன், ஏலியம்பேடு, வைரவன்குப்பம், கோளூா், மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்தைமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், சம்பா பருவத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிா் பயிரிடப்பட்டிருந்தது. புகையான் பூச்சித் தாக்குதலால் பயிா்கள் அனைத்தும் பதராகின.
இது குறித்து தினமணி நாளிதழில் கடந்த 8-ஆம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து வேளாண் துறையினா், சம்பா பருவ நெற்பயிா்களை ஆய்வு செய்தனா்.
இந்நிலையில், பூச்சித் தாக்குதலால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, பொன்னேரி வட்ட விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. நகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, ஹரிஹரன் கடை வீதி, தேரடி சந்திப்பு, தேரடி சாலை, திருவொற்றியூா் நெடுஞ்சாலை வழியாகச் சென்று கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
அதைத் தொடா்ந்து கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்நாதனிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில், ‘புகையான் பாதிப்புக்கு உள்ளான பயிா்களுக்கு விரைந்து நிவாரணத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பயிா்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் நிலுவையில் உள்ள பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.