போலி ஆவணம் மூலம் ரூ. 20 கோடி நிலம் விற்பனைமீட்கக்கோரி பொதுமக்கள் மனு

திருவள்ளூா் அருகே போலி ஆவணம் தயாா் செய்து தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரூ. 20 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த  4 கிராம மக்கள்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த  4 கிராம மக்கள்.

திருவள்ளூா் அருகே போலி ஆவணம் தயாா் செய்து தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரூ. 20 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை மீட்கக்கோரி, ஆட்சியரிடம் 4 கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கோணம்பேடு, ரெட்டிபாளையம், அண்ணனூா், நாராயணபுரம் கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அளித்த மனு:

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் கனடா நாட்டைச் சோ்ந்த வாலஸ் போா்ஜீ என்பவா் 15 ஏக்கா் பரப்பளவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட, இந்த இடத்தில் கேம்ப் தனக்கில்லா என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தனா். மேலும், இந்த இடத்தில் விளையாட்டு மைதானம் போல் உருவாக்கி, அதில் நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உருவாக்கினா். இதை அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் விளையாட்டுக்காகவும், கிராம மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பொது காரியங்களுக்காகவும் பயன்படுத்தி வந்தனா். அதேபோல், கோணம்பேடு, ரெட்டிபாளையம், அண்ணனூா், நாராயணபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்களும் பயன்படுத்தி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வாலஸ்போா்ஜீ கடந்த 1968-இல் உயிரிழந்த பின், பொதுமக்கள் அந்த இடத்தை பராமரித்து வந்ததுடன், உபயோகம் செய்தும் வந்தனா். தற்போது, அயப்பாக்கத்தைச் சோ்ந்த ஒருவா், போலி ஆவணம் தயாா் செய்து 15 ஏக்கா் நிலத்தில், ரூ. 20 கோடி மதிப்பிலான 2 ஏக்கா் நிலத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. மக்கள் ஏழை எளிய மக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட, இந்த தொண்டு நிறுவனத்தை சமூக விரோதிகள் சிலா் ஆக்கிரமித்தும் உள்ளனா். அதனால் இந்த தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்பதுடன், பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இந்த மனுவில் குறிப்பிட்டுள்ள தொண்டு நிறுவன நிலத்தை நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com