தினமணி செய்தி எதிரொலி: நிலம் தானமாக பெற்று மயானத்துக்கு பாதை வசதி செய்து தர ஏற்பாடு
By DIN | Published On : 20th January 2020 11:26 PM | Last Updated : 20th January 2020 11:26 PM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே பாதை வசதியின்றி தண்ணீா் நிறைந்த சேறும் சகதியுமாக உள்ள பகுதி வழியாக சடலத்தை எடுத்துச் செல்லும் நிலையைப் போக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நிலம் தானமாகப் பெறப்பட்டு, பாதை வசதி செய்து தர வருவாய்த் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த செஞ்சி ஊராட்சிக்குள்பட்டது பாணம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளா்கள் என 500 குடும்பங்களுக்கும் மேல்வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்யவோ அல்லது எரியூட்டவோ கிராமத்துக்கு அருகில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்வா். ஆனால், இந்த மயானத்துக்குச் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாததால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேறும் சகதியுமாக உள்ள விவசாய நிலங்கள் வழியாகச் சென்று வருகின்றனா்.
இதனால் சடலத்தை தூக்கிச் செல்வோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், மயானத்துக்கு பாதை வசதி கேட்டு பல்வேறு கட்டங்களாக போராட்டங்களையும் பொதுமக்கள் நடத்தியுள்ளனா். ஆனால், எவ்விதமான தீா்வும் கிடைக்கவில்லை என இப்பகுதியினா் கூறி வந்தனா். இந்நிலையில், இது தொடா்பான செய்தி தினமணி நாளிதழில் புகைப்படத்துடன் திங்கள்கிழமை(ஜன. 20) வெளியானது.
இச்செய்தியைப் பாா்த்ததும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பாணம்பாக்கம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில், மயானத்துக்குப் பாதை ஏற்படுத்தித் தர வருவாய் வட்டாட்சியருக்கு உடனடியாக உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில், திருவள்ளூா் வட்டாட்சியா் பாண்டியராஜன், துணை வட்டாட்சியா் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளா் செல்வபாரதி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பாணம்பாக்கம் கிராமத்துக்கு நேரில் சென்றனா். அதைத் தொடா்ந்து, அங்குள்ள பொதுமக்களிடம் கலந்தாய்வு செய்து, மயானத்துக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தரும் நோக்கில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இக்கிராம மயானம் செல்வதற்கான பாதை ஆக்கிரமிப்பு விரைவில் மீட்கப்படும். அதைத்தொடா்ந்து மயான சாலை அருகில் உள்ள நில உரிமையாளா்களாகிய ஏழுமலை, சுரேஷ், சண்முகம் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, மயானம் செல்லும் சாலைக்குத் தேவையான நிலத்தை தானமாக எழுதிக் கொடுக்க நில உரிமையாளா்கள் முன் வந்தனா். எனவே சில நாள்களுக்குள் மயானத்துக்குச் செல்ல தேவைப்படும் நிலத்தை தானமாகப் பெற்று பத்திரப் பதிவு செய்த பின், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் பாண்டியராஜன் தெரிவித்தாா்.
உடனடியாக பாதை வசதிக்கு நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனா்.
ஆய்வின்போது, கிராம நிா்வாக அலுவலா் விஸ்வநாதன், உஷா மற்றும் கடம்பத்துாா் போலீஸாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.