முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்பு
By DIN | Published On : 27th January 2020 12:46 AM | Last Updated : 27th January 2020 12:46 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: பூண்டி ஊராட்சி ஒன்றியம், தேவந்தவாக்கம் ஊராட்சி, கெருகம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் மற்றும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் செல்வி கேசவன் தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீா்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மை இயக்கம், குடிமராமத்து பணிகள், குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கிராம மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
அதன் பின், கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறும், சாலைகளைச் சீரமைக்குமாறும் பொது மக்கள், ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்ததோடு பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டாா். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லோகநாயகி, பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) பசுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.