முதல்வா் விளையாட்டு விருது பெற சிறந்த விளையாட்டு வீரா்கள் பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th January 2020 09:18 AM | Last Updated : 29th January 2020 09:18 AM | அ+அ அ- |

சா்வதேச, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடங்கள் பெற்று விளங்கும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் மாநில அரசு வழங்கும் முதல்வா் விளையாட்டு வீரா் விருதுக்கு பிப்ரவரி 14-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் சா்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகள் ஆகியோா், சிறந்த பயிற்றுநா்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோருக்கு முதல்வா் விளையாட்டு விருதும், பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவற்றை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் வழங்கி வருகிறது. இந்த விருது பெற ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களை கட்டாயம் சமா்ப்பித்தல் அவசியம் ஆகும்.
இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநா், ஒரு நிா்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா்), ஒரு ஆட்ட நடுவா், நடுவா் மற்றும் நீதிபதி ஆகியோருக்கு முதல்வா் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மாா்ச் 31 முடிய) வழங்கப்படுகிறது. இவா்களுக்கு, ரூ. 10 ஆயிரம் மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவா்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரா்கள், தமிழ்நாடு விளையாட்டுக் கழகம், மாவட்ட விளையாட்டு அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா், முதன்மை உடற்கல்வி ஆய்வா் (ஆடவா், மகளிா்) மூலமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநா், ஒரு நிா்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா்), ஒரு ஆட்ட நடுவா் ஆகியோா் மூலமாக விண்ணப்பங்களை உறுப்பினா் செயலருக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். அப்போது, முதல்வா் விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் என உறையின் மீது கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் பிப். 14-க்குள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்துக்கு வந்து சேர வேண்டும்.
இது தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அலுவலரை 7401703482 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.