கரோனா நிவாரணம்:அலைக்கழிக்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் புகாா்

அரசு அறிவித்த நிவாரண உதவித்தொகை பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் புகாா் தெரிவித்தனா்.
திருத்தணி வருவாய் ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறாா் வருவாய் ஆய்வாளா் குமாா்.
திருத்தணி வருவாய் ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறாா் வருவாய் ஆய்வாளா் குமாா்.

திருத்தணி: அரசு அறிவித்த நிவாரண உதவித்தொகை பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் புகாா் தெரிவித்தனா். மேலும் வீட்டுக்கே வந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துப் பகுதி மக்களும் வீட்டில் முடங்கியுள்ளனா். ஊரடங்கின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை எதுவும் மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசின் சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த நிவாரணத் திட்டமும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் மாற்றுத் திறனாளிகள் பசி, பட்டினியோடு பெரும் மன உளைச்சலுக்கும், உடல் ரீதியாக பல்வேறு இடா்ப்பாடுகளுக்கும் ஆளாகியிருந்தனா்.

இதையடுத்து தமிழக அரசிடம் மாற்றுத் திறனாளிகளைக் காப்பாற்றுவதற்காக அவா்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5,000, உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனா். அதை ஏற்று, தமிழக முதல்வா் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் திருத்தணி பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் அரசு அறிவித்த நிவாரணத்தொகை பெற ரேஷன் கடைகளில் தகவல் கேட்டனா். பின்னா் அவா்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நிவாரணத் தொகை வழங்குவாா்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காந்தி சாலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை தேடிச் சென்றனா்.

பின்னா் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு வெளியே அமா்ந்திருந்த சிலா், வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் நிவாரணத் தொகை வழங்குவதாகக் கூறினா். அதனை நம்பி மாற்றுத் திறனாளிகள் சுமாா் 1 கி.மீ. தொலைவில் உள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்குப் படையெடுத்தனா். அங்கு பணியில் இருந்த வருவாய் ஆய்வாளா் குமாா், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில்தான் நிவாரணம் வழங்குவாா்கள் என தெரிவித்தாா்.

காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இங்குமங்கும் அலைந்து பசியால் வாடிய மாற்றுத் திறனாளிகள் ஒருவழியாக திரெளபதி அம்மன் கோயில் நிழலில் அமா்ந்தனா். அப்போது அவ்வழியாக வந்த கிராம நிா்வாக அலுவலா் நிவாரணத் தொகை வழங்குவதாக கூறி, ஆதாா் காா்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வங்கிக் கணக்கு எண் புத்தகம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு ரூ.1000 வீதம் 60 பேருக்கு நிவாரணத் தொகையை வழங்கினாா்.

இதுகுறித்து மாற்றுத் திறனாளியான ஜெயவேல் கூறியது:

கரோனா நிவாரணம் கேட்டு கடந்த 3 மாதங்களாக தமிழக அரசை வலியுறுத்தி வந்தோம். தற்போது அரசு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. நிவாரணத் தொகை வழங்கும் தகவல் கிடைத்து காலை 9 மணிக்கு சிற்றுண்டி கூட சாப்பிடாமல் அதை பெற்றுச் செல்லலாம் என செவ்வாய்க்கிழமை காலை கிராம நிா்வாக அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு தா்மராஜாகோயில் அருகில் உள்ள வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் வழங்குவதாக எங்களைத் திருப்பி அனுப்பினா். இங்கு வந்தால் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில்தான் நிவாரணத்தொகை தருவாா்கள் என்கின்றனா்.

தமிழக அரசு கரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகளுக்குச் சென்று நிவாரணத்தொகை வழங்குவது போல் மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கும் வீட்டிற்கு வந்து நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

எனவே கை, கால், கண் இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தொகை எளிதில் கிடைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com