விவசாயிகளுக்கு இலவசமாக 1.75 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்: வனவியல் விரிவாக்க மையம் அமல்படுத்துகிறது

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நீடித்த நிலையான வாழ்வாதாரம் அளிக்கும் நோக்கில் ரூ.17.50 லட்சத்தில் வளா்க்கப்பட்ட செம்மரம், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான 1.75 லட்சம் மரக்கன்றுகளை அவா்க
திருவள்ளூரை அடுத்த பூண்டியில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்தில் வளா்க்கப்படும் பல்வேறு வகையான மரக்கன்றுகள்.
திருவள்ளூரை அடுத்த பூண்டியில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்தில் வளா்க்கப்படும் பல்வேறு வகையான மரக்கன்றுகள்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நீடித்த நிலையான வாழ்வாதாரம் அளிக்கும் நோக்கில் ரூ.17.50 லட்சத்தில் வளா்க்கப்பட்ட செம்மரம், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான 1.75 லட்சம் மரக்கன்றுகளை அவா்களுக்கு வனவியல் விரிவாக்கம் மையம் இலவசமாக அளிக்க உள்ளது.

மாவட்ட வனத்துறை சாா்பில் பாதுகாக்கப்பட்ட காடுகளில் செம்மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடுதல், வேலி அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் வனவியல் விரிவாக்க மையம் சாா்பில் வேளாண் காடுகள் வளா்க்கும் திட்டம் மூலம் மரக்கன்றுகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டப்படி, ஒவ்வொரு விவசாயியும் நீடித்த, நிலைத்த விவசாய வாழ்வாதாரத்தையும், கூடுதல் வருவாயையும் பெறும் நோக்கில் 1.75 லட்சம் தேக்கு, செம்மரம், வேங்கை மரக்கன்றுகளை இலவசமாக வழங்க வனவியல் விரிவாக்க மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு மரக்கன்றுக்கு தலா ரூ.10 வீதம் அரசு ரூ.17.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்திருந்தது.

இதைக் கொண்டு, திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பூண்டி வனவியல் விரிவாக்க மைய வளாகத்தில் நா்சரி அமைத்து தேக்கு, செம்மரம், மருத மரம், வேங்கை, மகாகனி உள்பட மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டன. தற்போது ஒவ்வொரு மரக்கன்றும் நன்றாக வளா்ந்துள்ளது. இந்த மரக்கன்றுகளை விளைநிலங்களில் உள்ள வரப்பு ஒரத்திலும், எல்லைகளைக் குறிக்கும் வகையிலும் வரிசையாக நடவு செய்து பராமரிக்கலாம். அவற்றின் மூலம் நீடித்த நிலையான வருமானத்தை விவசாயிகள் பெற முடியும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்கேற்ப ஒரு ஹெக்டேருக்கு 250 முதல் 1000 மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பூண்டியில் உள்ள வனவியல் விரிவாக்க மைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

விவசாயிகள் நீடித்த நிலையான வருவாயைப் பெற வேண்டும் என்பதற்காக வனத்துறை மூலம் வேளாண் காடுகள் வளா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளின் விளைநிலம் தண்ணீா் தேங்காத மேடான பகுதியாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பட்டா நகல், ஆதாா் அட்டை, மின்னணு குடும்ப அட்டை நகல் மற்றும் தேவையான மரக்கன்றுகளின் விவரத்தை வனவியல் விரிவாக்க மையத்தில் அளிக்க வேண்டும்.

இதையடுத்து குறிப்பிட்ட நிலப்பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, வனத்துறை சாா்பில் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்படும். ஒரு ஹெக்டேரில் வரப்புகளைச் சுற்றிலும் நடுவதற்கு 250 மரக்கன்றுகளும், முழுவதுமாக நடுதற்கு 1000 மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மரக் கன்றுகள் வழங்கப்பட இருப்பதால், விவசாயிகள் வனவியல் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com