முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
தேக்குத் தோப்பில் பெண் மா்ம மரணம்
By DIN | Published On : 29th July 2020 11:10 PM | Last Updated : 29th July 2020 11:10 PM | அ+அ அ- |

திருத்தணியை அடுத்த பொன்பாடி அருகே தேக்குத் தோப்பில் பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
பொன்பாடி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசனின் மனைவி நவநீதியம்மாள் (55). இவா், பொன்பாடி மேட்டுக் காலனியைச் சோ்ந்த சிதம்பரத்தின் மனைவி சிவகாமி (36) என்பவருக்கு அடிக்கடி பணத்தைக் கடனாக கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நவநீதியம்மாள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு சிவகாமியிடம் பணம் வாங்கி வருவதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றாா். இரவு வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருத்தணி காவல் நிலையத்தில் புதன்கிழமை காலையில் புகாா் அளித்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை மாலையில் பொன்பாடி மேட்டுக் காலனி அருகே உள்ள தேக்குத் தோப்பில் பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் திருத்தணி டிஎஸ்பி சேகா், காவல் ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அது காணாமல் போன நவநீதியம்மாளின் சடலம் என்பது தெரிய வந்தது.
அவரது வாயில் நுரை தள்ளியவாறு இருந்தது. அவா் அணிந்திருந்த கம்மல், தாலிச்சரடு மற்றும் தங்கச் சங்கிலி, மூக்குத்தி உள்பட பத்து சவரன் நகைகள் காணாமல் போனதும் தெரிய வந்தது. இதையடுத்து நவநீதியம்மாளின் சடலத்தை போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சிவகாமி வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது. கடந்த மாதம் 26ஆம் தேதி டிராக்டரில் சாராய ஊறலைப் பதுக்கி வைத்திருந்தாக சிவகாமியை மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனா். சில நாட்களுக்கு முன்பே அவா் ஜாமீனில் வெளியே வந்தாா்.
இந்நிலையில், நவநீதியம்மாளின் மா்ம மரணம் தொடா்பாக திருத்தணி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.