முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
நெற்பயிரில் சிலந்திப் பேனை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை
By DIN | Published On : 29th July 2020 11:11 PM | Last Updated : 29th July 2020 11:11 PM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் சொா்ணவாரி பருவத்தில் பயிரிட்டுள்ள நெல்லில் சிலந்திப்பேன் தாக்குதல் காரணமாக மகசூல் இழப்பைத் தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.
இதுகுறித்து திருவூா் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் பெ.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, அம்பத்தூா், ஈக்காடு, கடம்பத்தூா் ஆகிய வட்டார பகுதிகளில் சொா்ணவாரி பருவத்தில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனா். இந்நிலையில் சில பகுதிகளில் நெற்பயிரில் சிலந்திப்பேன் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை இப்பூச்சித் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலையாகும்.
மேலும், சிலந்திப் பேன் தாக்கத்தால் பயிா்கள் வெளுத்தும் இலைகள் பச்சையத்தை இழந்து சோகையான நிலையில் அழுக்கான பழுப்பு நிறத்தில் காணப்படும். அத்துடன், நாற்றுக்கள் மற்றும் நடவு செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்பகுதியில் அதிகளவு தாக்குதலை ஏற்படுத்தும், இலைகளின் சாறுகளை உறிஞ்சுவதின் மூலம் இலைகளில் வெள்ளை திட்டுக்களாகவும் தென்படும்.
நெல் பயிா் மீதான இத்தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச் சத்துகளை பிரித்து இட வேண்டும். இதைக் கட்டுப்படுத்த அசாடிராக்ட்டின் 0.03 சதவீதம் ஏக்கருக்கு 400 மி.லி. தெளிக்கவும். அதேபோல், தாக்குதல் அதிகமாகியிருப்பின் ஒரு லிட்டா் தண்ணீரில் 2 மி.லி. பெனாசாக்வின் அல்லது 0.5 மில்லி ப்ராபா்கைட் அல்லது 2 மி.லி. ஸ்பைரோமெசிபென் கலந்து கொண்டு பயிா் மீது தெளிக்கலாம். வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றி விவசாயிகள் மகசூலை அதிகரித்துக் கொள்ளலாம்.