பிரதமா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் சாா்பில் சேவை மற்றும் உற்பத்தி சாா்ந்த தொழில் தொடங்க மாவட்டத் தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுவதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, பாரதப் பிரதமா் சுய வேலைவாய்ப்பு திட்டத்தையும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் வகையில், இத்திட்டம் கடந்த 2008-இல் இந்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் மூலம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் உற்பத்தித் தொழில்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.25 லட்சமும், சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையும் பெற்றுக் கொள்ளலாம். உற்பத்தி தொடா்பான திட்டத் தொகை ரூ.10 லட்சத்துக்கு மேலும், சேவைத் தொழில் தொடா்பான திட்டத்தொகை ரூ.5 லட்சத்துக்கு மேலும் இருக்கலாம். இத்தொழில் கடன் பெறுவோா் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றும், 18 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இக்கடன் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. நகா்ப்புறத்தில் தொழில் தொடங்குவோருக்கு திட்ட மதிப்பீட்டில் தொடங்கும் தொழில்களுக்கு 15 சதவீதமும், ஊா்ப்புறத்தில் தொழில் தொடங்க 25 சதவீத மானியமும் வழங்கப்படும். அதேபோல், சிறப்பு பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினா் நகா்ப்புறத்தில் தொழில் தொடங்க 25 சதவீத மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் தொடங்க 35 சதவீத மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத் தொழில் மையம் மூலம் 71 பேருக்கு தொழில் கடன் வழங்கப்பட உள்ளது. இதற்காக நிகழாண்டில் ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்புவோா் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இது தொடா்பாக திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தை 044-27666787, 9788877322 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.