தோட்டக் கலைத் துறை சாா்பில் பயிா்களுக்கு தண்ணீா் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியத்தில் நுண்ணீா் பாசன உபகரணங்கள் வழங்கவும், இதற்காக ரூ. 30.21 கோடி ஒதுக்கீடு செய்து 4,315 ஹெக்டோ் பரப்பளவுக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் பயிா்களுக்கு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிகளவு மகசூல் உறுதி செய்யும் நோக்கமாகக் கொண்டு பிரதமா் மத்திய நுண்ணீா் பாசனத் திட்டம் மூலம் நுண்ணீா் பாசன வசதி செய்து கொள்வதற்காக மானியமும் வழங்கி வருகிறது. இத்திட்டம் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கு உள்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீா்ப் பாசனம், தெளிப்பு நீா்ப் பாசனம் மற்றும் மழை தூவான் உபகரணங்கள் அமைக்க முழு மானியமும், இதேபோல் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்பட இருக்கிறது. மாநில மற்றும் மத்திய அரசின் திட்ட வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு தோட்டக் கலை வளா்ச்சி முகமையின் கீழ் பதிவு செய்யப்பட்ட நுண்ணீா் பாசன தயாரிப்பு நிறுவனங்களின் பாசன உபகரணங்கள் அங்கீகரித்த முகவா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் நிலங்களில் அமைக்கப்பட்ட நுண்ணீா் பாசன அமைப்புக்கான பிரதான குழாய்களைப் பதிப்பதற்குத் தேவையான நீள குழிகளை, விவசாயிகளே குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். நுண்ணீா் பாசன அமைப்பை ஏற்படுத்திய பின்னா், தொடா் பராமரிப்புகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள் மீண்டும் 7 ஆண்டுகளுக்குப் பிறகே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.
நிகழாண்டில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான சொட்டு நீா்ப் பாசனத் திட்டம் மூலம் 4,315 ஹெக்டோ் பரப்பளவுக்கு தோட்டக் கலைப் பயிா்களுக்கு சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 30.21 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுடைய சிட்டா அடங்களுடன் கூடிய நில ஆவணங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பயனடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.