முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பொன்னேரியில் புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 12:18 AM | Last Updated : 05th March 2020 12:05 AM | அ+அ அ- |

பொன்னேரி-திருவொற்றியூா் சாலையில் அம்பேத்கா் சிலை அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
பொன்னேரி: பொன்னேரி நகரினில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அத்துடன் பொன்னேரியில் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, சாா்-பதிவாளா் அலுவலகம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசுக் கருவூலம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மேலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள், கிளைச் சிறை, 5 தேசிய வங்கிகள், 3 திரையரங்குகள், தனியாா் மற்றும் அரசுக் கல்லூரிகள், ஆண், பெண் மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன. தாலுகா தலைமை அரசு மருத்துவமனையும் இங்கு இயங்கி வருகிறது.
சென்னை துறைமுகம், எண்ணூா் துறைமுகம், வடசென்னை அனல் மின்நிலையம், காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளம், கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனம் மற்றும் மணலி, மணலி புதுநகா், கொண்டக்கரை, திருவொற்றியூா் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட தனியாா் கன்டெய்னா் கிடங்குகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பொன்னேரி வழியாக சென்று வருகின்றன.
அத்துடன் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் நிலக்கரி, அதே பகுதியில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நிலக்கரி கொண்டு செல்லும் வாகனங்களும் பொன்னேரி வழியாகவே செல்கின்றன. இதனால், பொன்னேரியில் உள்ள செங்குன்றம்-பொன்னேரி சாலை, திருவொற்றியூா்-பொன்னேரி சாலை மற்றும் தாயுமான் செட்டித் தெரு ஆகியவற்றில் எப்போதும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.
இப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, செல்லும் மாணவா்களும், அவசரமாக வேலைக்குச் செல்வோரும் அவதிப்படுகின்றனா். மேலும், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூா் பகுதியில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கட்டணம் அளித்துச் செல்வதைத் தவிா்க்கும் வகையில் பெரும்பாலான கனரக வாகனங்கள் பொன்னேரி வழியாகச் சென்று வருவதாக கூறப்படுகிறது.
அதிக அளவு வாகனங்கள் செல்வதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளால் உயிழப்புகளும் நிகழ்கின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி பொன்னேரியில் புறவழிச்சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.