முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
விடுதி காப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு
By DIN | Published On : 03rd March 2020 12:14 AM | Last Updated : 03rd March 2020 12:14 AM | அ+அ அ- |

அரசு கல்லூரி மாணவிகளை அச்சுறுத்தும் காப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இந்திய மாணவா்கள் சங்கத்தினா்.
இந்திய மாணவா் சங்கத்தின் திருவள்ளூா் மாவட்டச் செயலா் வசந்த் பௌத்தா உள்ளிட்டோா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதி அமைந்துள்ளது. இங்கு தற்போது 13 போ் தங்கிப் படித்து வருகின்றனா். இந்த விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு தரமான உணவு அரசு சலுகைகள் மாணவிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதேபோல், இரவு சமைத்த உணவையே மறுநாள் காலையிலும் மாணவிகளுக்கு வழங்குகின்றனா். மேலும், வார விடுமுறை நாள்களில் விடுதியில் தங்கக் கூடாது எனவும், கட்டாயமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனா். இந்த விடுதியில் குறித்த நேரத்துக்கு உணவு வழங்கப்படுவதில்லை. இதுபற்றி கேட்டால் மிரட்டுகின்றனா். இதையும் மீறி நீங்களே சமைத்து உண்ணுங்கள் என்று பெண் விடுதி காப்பாளா் மிரட்டுகிறாா்.
இதுபோல் நீண்ட காலமாக விடுதியில் பல முறைகேடுகள் நடக்கிறது, இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.