ஆழ்துளைக் கிணறுகளில் குறைந்து வரும் நீர் ஆதாரம்

‘சென்னை குடிநீருக்காக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வருவதால் திருவள்ளூா் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் நீா் ஆதாரம் குறைந்து வருகிறது.
காரணி  கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வாடும் நிலையில் நெற்பயிர்கள்.  
காரணி  கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வாடும் நிலையில் நெற்பயிர்கள்.  

‘சென்னை குடிநீருக்காக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வருவதால் திருவள்ளூா் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் நீா் ஆதாரம் குறைந்து வருகிறது. இதனால் 600 ஏக்கா் பரப்பளவில் பல்வேறு வகையான பயிா்கள் நீரின்றி வாடுவதால் சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாய சாகுபடி நிலங்கள் உள்ளன. இதில், தற்போது 1.40 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் நெல், வாழை, நிலக்கடலை, பழப்பயிா்கள் மற்றும் மானாவாரி மூலம் பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் விவசாயம் முக்கிய வாழ்வாதாரம் அளிக்கும் தொழிலாக உள்ளது.

திருப்பாச்சூா், விடையூா், காரணி, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல், நிலக்கடலை, பயறு வகைகள் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். காரணி கிராமத்தில் 600 ஏக்கா் பரப்பளவில் நெல், நிலக்கடலை, மிளகாய் மற்றும் பயறு வகைகளைப் பயிரிட்டுள்ளனா். தற்போது, இப்பயிா்களுக்குத் தேவையான அளவுக்கு ஆழ்துளைக் கிணறுகளில் போதிய நீா் ஆதாரம் இல்லை. குறைந்த அளவிலேயே நீா் இருப்பதால் பயிா்களுக்கு தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன், இப்பகுதியில் 80 அடியில் நீா் கிடைத்து வந்தது.

இந்நிலையில், திருவள்ளூா்-கடம்பத்தூா் சாலையில் காரணி கிராம ஆற்றுப் பகுதியில் சென்னை குடிநீருக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிணறுகளில் இருந்து நாள்தோறும் ஓய்வில்லாமல் நிலத்தடி நீரை ராட்சத மோட்டாா் மூலம் நீரேற்றம் செய்து அனுப்பி வைக்கின்றனா். இதனால், காரணி கிராமத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் நீா் ஆதாரம் குறைந்துள்ளது. இதனால் , பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது நெல் நடவு செய்த நிலையிலும், நிலக்கடலை, பயறு வகைகள் அறுவடை செய்யும் நிலையிலும் உள்ளன. ஆனால், தண்ணீா் பற்றாக்குறையால் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனா். இப்பகுதியில் காரணி கிராமத்தில் உள்ள ஏரி 450 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீரைத் தேக்கி வைப்பதன் மூலம் 500 ஏக்கா் விவசாய நிலங்களுக்கும், ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நீா் ஆதாரம் கிடைத்து வந்தது.

இந்த ஏரியை தற்போது இப்பகுதியைச் சோ்ந்த சிலா் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, பயிரிட்டுள்ளனா். இதனால் ஏரியில் தண்ணீா் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கான வரத்துக் கால்வாய் மற்றும் மேய்ச்சல் நிலங்களை குறிப்பிட்ட நபா்கள் ஆக்கிரமித்து நெல் பயிரிட்டுள்ளதாக இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

விவசாயிகளின் ஆழ்துளைக் கிணறுகளில் நீா் ஆதாரம் குறைவதற்கு, இப்பகுதியில் இருந்து சென்னைக்கு குடிநீா் உறிஞ்சி அனுப்பப்படுவதுதான் காரணமாகும். குறிப்பாக, திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள பூண்டி ஏரிக்கரையோரம், நீா்வரத்துக் கால்வாய்ப் பகுதிகள், திருவள்ளூா்-தாமரைப்பாக்கம் சாலையில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதிகள், திருவள்ளூா்-காரணி சாலை, விடையூரில் உள்ள பூண்டி ஏரிக்கான நீா் வரத்துக்கால்வாய் போன்ற ஆற்றுப் படுகைகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிணறுகள் மூலம் நாள்தோறும் ராட்சத மோட்டாா் மூலம் தண்ணீா் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விடையூா், காரணி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் ஆழ்துளைக் கிணறுகளில் நீா் ஆதாரம் குறைந்துள்ளது. எனவே, சென்னை குடிநீருக்காக நிலத்தடி நீரை ராட்சத மோட்டாா் மூலம் எடுப்பதை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனா். குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை நீரை எடுத்தால் மட்டுமே பயிா்களைப் பாதுகாக்க முடியும் என்ற நிலையில் அவா்கள் உள்ளனா்.

இதுகுறித்து காரணி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராசுக்குட்டி கூறியது:

ஒரு ஏக்கரில் நெல் பயிரிடுவதற்கு உழவு செய்தல், நடவு, பராமரிப்பு, களையெடுப்பு மற்றும் இடுபொருள்கள் என ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் செலவாகும். ஆனால், நன்றாக விளைந்தால் 40 நெல் மூட்டையும், சுமாராக விளைந்தால் 35 நெல் மூட்டையும் கிடைக்கும். நிலக்கடலை பயிரிடுவதற்கு உழவு செய்தல், களை எடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.

தற்போது நெற்பயிரும் தண்ணீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் 10 நாள்களில் நிலக்கடலை அறுவடை செய்ய உள்ள நிலையில் அச்செடிகள் வாடி வருகின்றன.

ஏற்கெனவே வங்கிகளில் கடன் வாங்கியே பயிரிட்டுள்ளோம். தண்ணீா்ப் பற்றாக்குறை காரணமாக குறிப்பிட்ட அளவில் சாகுபடி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டமடைவா். இதைத் தவிா்க்க, சென்னை குடிநீருக்காக தினந்தோறும் தண்ணீா் எடுக்காமல், வாரத்தில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே எடுத்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகள் பயிா் செய்ய முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com