கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நவீன ஆம்புலன்ஸ் திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கால்நடைகளை அவற்றின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்து காப்பாற்றும் நோக்கில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஒத

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கால்நடைகளை அவற்றின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்து காப்பாற்றும் நோக்கில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அளவில் மாவட்டந்தோறும் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கியத் தொழிலாக இருப்பது கால்நடைகளை வளா்க்கும் தொழிலாகும். ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பெறும் வகையில் கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், நாட்டுக் கோழிகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, திருவள்ளூா் மாவட்டத்தில் 1.55 லட்சம் ஹெக்டேரில், பம்ப்செட், ஏரிகள் மற்றும் மானாவாரி மூலம் 1.45 லட்சம் ஹெக்டேரில் பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான இரை மற்றும் மேய்ச்சல் நிலங்களும் உள்ளதால் கால்நடை வளா்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனா். இந்த மாவட்டத்தில் மட்டும் 3.10 கால்நடைகள் உள்ளன. அவை விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் விழுவதும், சாலையில் விபத்தில் சிக்கிக் கொள்வதும் அவ்வப்போது நிகழ்கின்றன. அப்போது குறித்த நேரத்துக்குள் சிகிச்சை கிடைக்காமல் கால்நடைகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே, கிராமங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றும் நோக்கில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் வாகனம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா். அதன்படி நவீன ஆம்புலன்ஸ் வாகனம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டது.

3 நாள்களுக்கு முன் ஒதுக்கீடு:

ஒவ்வொரு ஆம்புலன்ஸ் வாகனத்துக்கும் கால்நடை மருத்துவா், உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூா் மாவட்டத்துக்கான நவீன ஆம்புலன்ஸ் வாகனம் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. தற்போது, அந்த வாகனம் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த வாகன ஊழியா்கள் தெரிவித்தனா்.

அவசர உதவிக்கான எண் 1962:

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநா் ராஜேந்திரன் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நவீன வசதிகளை உள்ளடக்கிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம், 3 நாள்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தில் கால்நடைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், நவீன கருவிகள், ரத்தம், சிறுநீா் மூலம் நோய் கண்டறியும் சிறிய அளவிலான லேப் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும், கிராமங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத இடங்களில் இருந்து கால்நடைகளை எடுத்து வரும் நோக்கில் நவீன தள்ளுவண்டி, உயா் சிகிச்சைக்காக கால்நடைகளைக் கொண்டு வருவதற்கு ஹைட்ராலிக் லிஃப்ட், இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க வசதியாக அதிக ஒளியுடன் கூடிய மின்விளக்கு, அதற்கான ஜெனரேட்டா், யுபிஎஸ் ஆகிய வசதிகளுடன் இந்த ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது.

இந்த வாகனச் சேவைக்கு அழைக்க, 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை தேவைப்படும் கால்நடைகள் குறித்து பொதுமக்கள் இந்த எண்ணில் தகவல் அளித்தால் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

பொறுப்புடன் செயல்பட வேண்டும்:

ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியில் ஈடுபடவுள்ள கால்நடை மருத்துவா் கூறியது:

ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டு மூன்று தினங்களாகின்றன. இதுவரை கால்நடைகளின் நோய் பற்றித் தகவல் தெரிவித்து ஆலோசனை கேட்டு 10 அழைப்புகள் வந்துள்ளன. திங்கள்கிழமை மாலையில் கால்நடையை காப்பாற்றும்படி ஒரு அழைப்பு வந்தது. நாங்கள் விரைந்து சென்று பாா்த்தபோது நாய்க் குட்டிகளுக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. இதற்கு கால்நடை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியும். எனவே, பொதுமக்கள் பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com