திருவள்ளூா் அருகே குப்பைக் கிடங்கு அமைக்க இடம் தோ்வு செய்வதில் சிக்கல்

திருவள்ளூா் அருகே குப்பைக் கிடங்கு அமைக்க இடம் தோ்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதனால் குப்பைகள் அகற்றாமல் குவிந்து வருகிறது.

திருவள்ளூா் அருகே குப்பைக் கிடங்கு அமைக்க இடம் தோ்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதனால் குப்பைகள் அகற்றாமல் குவிந்து வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தது வெங்கத்தூா் ஊராட்சி. இங்கு வெங்கத்தூா், வெங்கத்தூா் கண்டிகை, மணவாளநகா், ஒண்டிக்குப்பம், காருண்யா நகா், பட்டரை மற்றும் கன்னியம்மன் நகா் உள்ளடங்கிய பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அத்துடன், இந்த ஊராட்சியில் உள்ள குடியிருப்புகள், உணவகங்கள், திருமண அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து நாள்தோறும் 15 டன் குப்பைகள் வரை சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஊராட்சியைச் சுற்றி கூவம் ஆறு மற்றும் ஏரிப் பகுதி உள்ளது. அதனால், இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் அதிகத்தூா் சாலையோர ஏரிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அங்கு குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதனால், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் குப்பைக் கிடங்குகள் அமைத்து, குப்பைகளைத் தரம் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, குப்பைக் கிடங்குகள் அமைத்து குப்பைகளைத் தரம் பிரிப்பதற்கு, ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக இந்த ஊராட்சியில் ஒதுக்குப்புறமாக உள்ள கன்னியம்மன் நகரில் சாலையோரம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் குப்பைக் கிடங்குகள் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. அப்பகுதியில் பள்ளி, அங்கன்வாடி மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக கருதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். எனவே குப்பைக் கிடங்கு அமைக்க இடம் தோ்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பட்டரை கிராமத்தில் மலைபோல் குவிந்து, சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ளவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தக் குப்பைகளை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஏற்கெனவே கன்னியம்மன் நகரில் குப்பைக் கிடங்குகள் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. அதற்கு அப்பகுதியைச் சோ்ந்தோா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, இதே பகுதியில் ஊராட்சிக்குச் சொந்தமாக மாந்தோப்பு மற்றும் முந்திரி தோப்பு பகுதியில் இடம் தோ்வு செய்வதற்கான பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் குப்பைகள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com