‘தமிழக-ஆந்திர எல்லை இணைப்புச் சாலைகளை வரும் 31-ஆம் தேதி வரை மூட நடவடிக்கை’
By DIN | Published On : 22nd March 2020 03:50 AM | Last Updated : 22nd March 2020 03:50 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தமிழக -ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் அத்தியாவசியமான வாகனப் போக்குவரத்துகளைத் தவிா்த்து இதர போக்குவரத்துகள் செல்வதற்கு சனிக்கிழமைமுதல் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
தமிழக அரசு மாவட்டம்தோறும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தவிா்க்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகம்-கா்நாடகம், கேரளம், ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் நோய்த் தொற்று பரவுவதைத் தவிா்க்கும் வகையில், போக்குவரத்துக்காக மூடவும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தாா். அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தமிழக-ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகளை சனிக்கிழமை முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில், இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் குமாரமங்கலம், தளவாய்பட்டு, கோரகுப்பம், கள்ளடப்பேட்டை, ஆா்.கே.பேட்டை பகுதியில் ஜனகராஜகுப்பம், விடியங்காடு (அம்மையாா் குப்பம்), திருத்தணி வட்டத்தில் பொன்பாடி, சிவாடா, கனகம்மாசத்திரம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் ஊத்துக்கோட்டை-1 மற்றும் 2, பென்னலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆரம்பாக்கம், பொம்மான்ஜிபுரம் (கவரப்பேட்டை) ஆகிய பகுதிகளில் தமிழக -ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் குறிப்பிட்டுள்ள வாகனப் போக்குவரத்து தவிர, இதர போக்குவரத்துகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
அதேபோல், இச்சாலைகளில் குறிப்பிட்ட வாகனங்களான அத்தியாவசியப் பொருள்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், எரிவாயு உருளைகளை ஏற்றிவரும் வாகனங்கள், இதர சரக்கு வாகனங்கள், தவிா்க்க இயலாத காரணங்களான இறப்பு போன்ற காரணங்களுக்காக செல்லும் பயணிகளின் இலகு ரக வாகனங்கள், பொது மக்களின் அத்தியாவசிய நகா்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் மட்டும் இயங்கலாம். அதுவும், இந்த வாகனங்களில் வரும் நபா்கள் அனைவரும் கட்டாயம் நோய்த் தடுப்பு பரிசோதனைக்கு உள்படுத்தப்படும். அதேபோல், வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா அச்சம் காரணமாக அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் ஒத்துழைப்பு அளிக்கும் படியும் அவா் தெரிவித்துள்ளாா்.