கேரளம் சென்று வந்த 43 பேருக்கு மருத்துவப் பரிசோதனை
By DIN | Published On : 25th March 2020 01:56 AM | Last Updated : 25th March 2020 01:56 AM | அ+அ அ- |

முஸ்லிம்களிடம் மருத்துவப் பரிசோதனை செய்யும் மருத்துவா் தினேஷ்.
கேரள மாநிலத்துக்கு அண்மையில் சென்று வந்த முஸ்லிம் நகா் மற்றும் இஸ்லாம் நகரில் உள்ள 43 முஸ்லிம்களிடம் மருத்துவா்கள் 4 போ் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தனா்.
திருத்தணி ஒன்றியம், முஸ்லிம் நகா் மற்றும் இஸ்லாம் நகரைச் சோ்ந்த முஸ்லிம்கள், 40-க்கும் மேற்பட்டோா் தொழில் சம்பந்தமாக கேரள மாநிலத்துக்குச் சென்று திரும்பி வந்துள்ளனா். மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் இளங்கோவன் உத்தரவின்பேரில், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ் தலைமையில், நான்கு மருத்துவா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் மேற்கண்ட இரண்டு பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்றனா்.
பின்னா், கேரளத்தில் இருந்து வந்த முஸ்லிம்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில், யாருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி இல்லை என மருத்துவா்கள் கண்டுபிடித்து, தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தினா்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ் கூறுகையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். குறிப்பாக, வைரஸ் பரவாமல் இருக்க, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். பொதுமக்கள் ஒரு மீட்டா் தூரம் நின்று தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், கிராமம் மற்றும் நகர பொதுமக்கள் அவசரம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும், மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக வெளிநாடு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூா்களில் இருந்து அண்மையில் வந்தவா்கள் பொதுமக்கள் நலன்கருதி, தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயம் ஆகும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் தான் கரோனா வைரஸை விரட்ட முடியும் என்றாா்.