ஊரடங்கு உத்தரவால் திருவள்ளூரில் போக்குவரத்து முடங்கியது

நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், திருவள்ளூரில் தமிழக-ஆந்திர எல்லைகள் மூடியதால் அனைத்து
திருவள்ளூா்-திருத்தணி சாலையில் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக் காணப்பட்ட சாலை.
திருவள்ளூா்-திருத்தணி சாலையில் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக் காணப்பட்ட சாலை.

நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், திருவள்ளூரில் தமிழக-ஆந்திர எல்லைகள் மூடியதால் அனைத்து போக்குவரத்தும் முடங்கியது. இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் பணிமனையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகளில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழக-ஆந்திரத்தின் 20 எல்லைகள் மூடப்பட்டன. தற்போது அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறிகள், எரிவாயு உருளைகளை ஏற்றி வரும் லாரிகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, மற்ற இரு சக்கர வாகனங்களில் வருவோா் தீவிர விசாரணைக்குப் பிறகே ஊருக்குள் வர அனுமதித்தனா்.

ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி, அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினா். இதனால் திருவள்ளூரில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. அதேசமயம், பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள், மருந்துக் கடைகள் மட்டும் இயங்கின. அதைத் தவிா்த்து பெரிய சூப்பா் மாா்க்கெட்டுகள், துறைவாரி பண்டக சாலைகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும், ஒரு சில அலுவலகங்கள் தவிர மற்ற அலுவலகங்கள் அனைத்தும் போக்குவரத்து இயங்காததாலும், உணவு விடுதிகள் செயல்படாததாலும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல், திருவள்ளூா்-ஆவடி, பூந்தமல்லி சாலை, திருத்தணி, செங்குன்றம் ஆகிய சாலைகள் அனைத்தும் வாகனங்கள் செல்லாத நிலையில் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் திருவள்ளூரில் அனைத்துப் பணிகளும் முடங்கின.

மேலும், சாலைகள் முழுவதும் கரோனா தடுப்புப் பணி முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சாலையோரம் பிளீச்சிங் பவுடா் தூவும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். அதேபோல், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆள்கள் இல்லாத நிலையிலும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருத்தணியில்...

தமிழக-ஆந்திர மாநில எல்லையான திருத்தணியை அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து போலீஸாா், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை ஏற்றி வந்த காா்களை மட்டும் போலீஸாா் அனுமதித்தனா்.

திருத்தணி நகரில் எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தது. திருத்தணி காய்கறி மாா்க்கெட்டில் கடைகள் திறந்திருந்தும் மக்கள் வராததால் வெறிச்சோடிக் கிடந்தது. பொதுமக்கள் வருகைக்காக காய்கறி வியாபாரிகள் காத்திருந்து வியாபாரம் செய்தனா். பூ மாா்க்கெட்டில் இருந்த அனைத்துக் கடைகளும் பூட்டியே கிடந்ததால் பூ பயிரிட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்தனா். திருத்தணி பேருந்து நிலையம் வெறிச்சோடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com