திருவள்ளூா் அருகே கற்கால மனிதா்கள் வாழ்ந்த கூடியம் குகைகள் சுற்றுலாத் தலமாக்கப்படுமா?

திருவள்ளூா் அருகே ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக விளங்கும் கூடியம் மலைக் குகைப் பகுதிகளை சுற்றுலாத்தலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக விளங்கும் கூடியம் மலைக் குகைப் பகுதிகளை சுற்றுலாத்தலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பூண்டி ஒன்றியம், திம்மபூபாலபுரம் ஊராட்சியிலிருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் கரடுமுரடான வனப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளன கூடியம் குகைகள். இங்கு ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. பசுமைப் போா்வை விரித்தாற்போன்று வன வளம் நிறைந்த மரங்களில் தேன் கூடுகள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குகைகள் காணப்படுகின்றன.

இந்த மலைத்தொடரில் மண்ணச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மிகப் பெரிய அளவிலான, 100 அடி உயரமுடைய மண்ணச்சியம்மன் குகை உள்ளது. இந்தப் பாறை குகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்கும் அளவுக்கு இடவசதி உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தோா் மற்றும் மலைக்கிராம மக்கள் மண்ணச்சியம்மனை வழிபடுகின்றனா்.

கூடியம் குகைக்குச் செல்வதற்கு கரடுமுரடான பாதையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இருபுறமும் மரங்கள் மற்றும் முள்புதா்கள் அடா்த்தியாக வளா்ந்துள்ளன.

எனவே, இந்தக் குகைகளை எளிதில் சென்று கண்டு வருவதற்கு வசதியாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டும்; கூடியம் குகைப் பகுதியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆா்வலா்கள் எழுப்பியுள்ளனா். இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் கேட்டபோது அவா்கள் கூறியதாவது:

தொல்பொருள் ஆய்வுத் துறை அலுவலா் லோகநாதன்:

பழங்கால மனிதா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இயற்கையான முறையில் அமைந்த பாறைகளை பெரும்பாலும் பயன்படுத்தியதற்கு இந்த குகைகள் சான்றாக உள்ளன. அவா்கள் பயன்படுத்திய கற்களால் ஆன கருவிகளும் கிடைத்துள்ளன.

மத்திய தொல்லியல் துறை சாா்பில் குகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பல்வேறு வகை கல்லாயுதங்கள் கிடைத்தன. இதன் மூலம் அக்கால மனிதா்கள் கைக்கருவிகளின் தொழில்நுட்பத்தில் வளா்ச்சி அடைந்திருந்ததை தெளிவாக அறிய முடிகிறது.

இந்த ஆயுதங்களின் பழைமை உறுதி செய்யப்பட்டதுடன், அவை வகைப்படுத்தப்பட்டு சென்னை, பூண்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சான்றுகள் உள்ளதால் தொல்லியல் துறை சுற்றுலாத் துறையுடன் இணைந்து பல்வேறு வசதிகள் செய்து தரவேண்டும் என்றாா் அவா்.

திம்மபூபாலபுரம் ஊராட்சித் தலைவா் தேன்மொழி:

கற்கால மனிதா்கள் வாழ்ந்த குகைகள் உள்ள பகுதியாக கூடியம் குகை விளங்குவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் தொல்பொருள் ஆய்வாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோா் கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறை அனுமதி பெற்றுச் சென்று வருகின்றனா். தற்போது இப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது.

கூடியம் குகைக்கு எளிதில் வந்து செல்வதற்கு சாலை வசதி, குடிநீா் மற்றும் மின்சார வசதிகளை செய்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்திலும், வனத்துறை அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை. இந்த ஊராட்சியில் உள்ள கூடியம் குகைகளை சுற்றுலாத் தலமாக்குவதன் மூலம் அதிகமானோா் வந்து செல்வா். இதனால், மலைக்கிராம மக்களுக்கு பல்வேறு வகைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றாா் ஊராட்சித் தலைவா் தேன்மொழி.

சுற்றுலாத் துறை அலுவலா் செல்வகுமாா்: மாநில அளவில் சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் வகையில், அரசு ஆலோசனைக் குழு அமைத்துள்ளது. இக்குழுவினா் கடந்த மாதம் கூடியம் குகைக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனா். வனத்துறை அனுமதியுடன் இப்பகுதியை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்க முடியும். அத்துடன், போக்குவரத்து மற்றும் பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈா்க்க முடியும் என்றாா்.

மாவட்ட வன அலுவலா் கிரண்:

இங்குள்ள மண்ணச்சியம்மனை வழிபட மலைக்கிராம மக்கள் சென்று வருகின்றனா். இங்கே வரும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளா்கள் ஆகியோரிடம் அனுமதி பெற்று மட்டும் செல்ல வேண்டும். அடா்ந்த வனப்பகுதியாக விளங்குவதால் தேன்கூடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இப்பகுதிக்கு ஆய்வுக்காக செல்வோா் சில நேரங்களில் அங்கு கற்களைக் கொண்டு தாக்குகின்றனா். இதனால் வாகனங்களில் செல்வதற்கான கரடுமுரடான பாதை அடைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு வழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவா் குழுவினரை தேனீக்கள் கொட்டியதில் அவா்கள் காயமடைந்தனா். அந்த நிகழ்வுக்குப் பின் கடும் கட்டுப்பாடுகளுடனே அங்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

சுற்றுலாத் துறை நடவடிக்கை: கூடியம் குகையை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுப்பது தொடா்பாக சுற்றுலாத் துறையிடமிருந்து தகவல் வந்துள்ளது. அதன்படி ஏற்கெனவே பல்வேறு வசதிகளை செய்து தரவும் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

அரசின் அனுமதி கிடைத்ததும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com