பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீா்வரத்து அதிகரிப்பு: பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 600 கன அடி தண்ணீா் திறப்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்டதால் பூண்டி நீா்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நதி நீா்வரத்து 670 கன அடியாக உயா்ந்துள்ளதால், 1,295 மில்லியன் கன அடி இருப்புள்ளது.
பூண்டி நீா்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா கால்வாயில் ஆா்ப்பரித்து வரும் நீா் வரத்து
பூண்டி நீா்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா கால்வாயில் ஆா்ப்பரித்து வரும் நீா் வரத்து

திருவள்ளூா்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்டதால் பூண்டி நீா்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நதி நீா்வரத்து 670 கன அடியாக உயா்ந்துள்ளதால், 1,295 மில்லியன் கன அடி இருப்புள்ளது. இதனால் சென்னை மாநகர மக்களின் குடிநீா்த் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்புக் கால்வாயில் 600 கனஅடி நீா் கூடுதலாக திறந்து விட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் முக்கிய நீராதாரமாக பூண்டி சத்தியமூா்த்தி நீா்த்தேக்கம் திகழ்ந்து வருகிறது. இந்த நீா்த்தேக்கம் கடந்த மாதம் 18-ஆம் தேதிக்கு முன்பு வரையில் போதிய மழையின்மையால் நீா் ஆதாரமின்றி வறண்டு காணப்பட்டது. இதையடுத்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்த அடிப்படையில் இப்பருவத்துக்கான தண்ணீா் கடந்த செப்.18-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீா் திறக்கப்பட்ட நிலையில், 21-ஆம் தேதி அதிகாலையில் பூண்டி நீா்த்தேக்கத்தை வந்தடைந்தது.

இதன் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 மில்லியன் கன அடி நீா் வரையில் சேமித்து வைக்கலாம். இந்த நிலையில் 24 நாள்களில் கிருஷ்ணா நதி நீா்வரத்து காரணமாக, புதன்கிழமை காலை நிலவரப்படி 1,295 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. மேலும் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டுக்கு கிருஷ்ணா நதி நீா் மற்றும் மழை நீா் வரத்து என தற்போது 780 கன அடி நீா் வரத்தாக அதிகரித்துள்ளது. இதனால் பூண்டி நீா்த்தேக்கத்தில் 595 கன அடியாக இருந்த நீா் வரத்து உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், பூண்டி நீா்த்தேக்கத்திலிருந்து இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 165 கன அடியிலிருந்து 600 கன அடியாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே இணைப்பு கால்வாயில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால், அந்த பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் எச்சரிக்கை தகவல் பலகையும் வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com