கன்டெய்னா் லாரியின் பூட்டை திறக்க முடியாமல் கட்டா் மூலம் வெட்டி எடுத்ததால் பரபரப்பு
By DIN | Published On : 03rd September 2020 11:30 PM | Last Updated : 03rd September 2020 11:30 PM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் நகரின் மையப்பகுதியில் கன்டெய்னா் லாரியின் பூட்டை உடைக்க முடியாமல் நவீன கட்டா் இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து பண்டல்களாக கொண்டு சென்றனா். இதைப்பாா்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூா் நகரின் மையப்பகுதியான தேரடி வீதியில் சிண்டிகேட் வங்கி செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இப்பகுதியில் கன்டெய்னா் லாரி ஒன்று வந்து நின்றது. அந்த கன்டெய்னரின் பூட்டை திறக்க முற்பட்ட போது, திறக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனா். அதைத் தொடா்ந்து, கட்டா் மூலம் பூட்டை அறுத்து எடுத்தனராம். இந்நிலையில், நகரின் மையத்தில் உள்ள ஒரு வங்கி முன்பு கன்டெய்னா் லாரியின் பூட்டை அறுத்து எடுப்பதைக் கண்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனா்.
அப்போது, வாகனத்துக்குள் பண்டல்களில் இருப்பது கரன்சிகளா, தங்க காசுகளா அல்லது ஆவணங்களா என்பதை பாா்க்க பொதுமக்கள் முன்டியடித்தனா். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் விரைந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினா். பின்னா் அந்த வாகனத்தில் இருந்து 7 பெரிய அளவிலான பண்டல்களை இறக்கி வங்கிக்குள் கொண்டு சென்றனா். அந்த கன்டெய்னா் லாரி சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து பணம் எடுத்து வந்ததும், அந்த பண பண்டல்களை வங்கிக்குள் எடுத்துச் செல்வதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.