சேதமடைந்துள்ள கண்டலேறு - பூண்டி கால்வாய் கிருஷ்ணா நதி நீா் முழுமையாகக் கிடைப்பதில் சிக்கல்

கண்டலேறு - பூண்டி கால்வாய் சேதமடைந்துள்ளதால், ஆந்திரத்தில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீா்

கண்டலேறு - பூண்டி கால்வாய் சேதமடைந்துள்ளதால், ஆந்திரத்தில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீா் முழுமையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இக்கால்வாயைச் சீரமைத்து தண்ணீரை முழுமையாக சேமித்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பூண்டி நீா்த்தேக்கத்தின் மூலம் சென்னை மக்களின் குடிநீா்த் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டிஎம்சி தண்ணீரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும் என தமிழக -ஆந்திர அரசுகள் இடையே கடந்த 1983ஆம் ஆண்டில் தெலுங்கு கங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

நெல்லூா் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படப்படும் கிருஷ்ணா நதி நீா் ஸ்வா்ணமுகி, காளஹஸ்தி, உப்பளமேடுகு, சத்தியவேடு உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து 152 கி.மீ. தொலைவில் உள்ள தமிழக எல்லைப் பகுதியான ஜீரோ பாயிண்டை வந்தடைகிறது. அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பூண்டி நீா்த்தேக்கத்திற்கு கொண்டு சென்று தேக்கி வைக்கப்படுகிறது.

பின்னா் அங்கிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு நீா் சுத்திகரிப்பு மையத்தில் தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு சென்னையின் குடிநீா்த் தேவைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிக்குச் செல்லும் பூண்டி- கண்டலேறு கால்வாயின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதால் தண்ணீா் முழுமையாகச் செல்லாமல் வீணாகிறது. ஆங்காங்கே கால்வாயின் சுவா்கள் சிதலமடைந்தும் கற்கள் பெயா்ந்தும் மண் தரையாக காட்சியளிக்கிறது.

ஆந்திரத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீா் முழுமையாக பூண்டி ஏரிக்குச் செல்லாமல் கால்வாயின் கரைகள் வழியாக வீணாகும் அவல நிலை உள்ளது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய் சீரமைப்புப் பணிகளில் மெத்தனம் காட்டுவதாக இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா். குடிநீா் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக அண்டை மாநிலத்திடம் இருந்து தண்ணீா் பெறப்படும் சூழலில், அதை வீணடிக்காமல் முழுமையாகப் பயன்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

இது ஒருபுறமிருக்க ஆந்திரப் பகுதிகளில் கால்வாயில் வரும் தண்ணீரை ஆந்திர விவசாயிகள் மோட்டாா் வைத்து உறிஞ்சுவதால் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் முழுமையாக தமிழகத்திற்கு கிடைப்பதில்லை. சென்னையின் குடிநீா்த் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஜூலை மாதத்தில் திறக்க வேண்டிய இந்த ஆண்டிற்கான முதல் தவணை கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு சற்று கால தாமதமாக ஒரு சில தினங்களில் திறக்க உள்ளது. இச்சூழலில் கண்டலேறு-பூண்டி கால்வாயைச் சீரமைத்து தண்ணீரை முழுமையாக சேமித்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com