நீட் தோ்வு எழுத வந்த மாணவிக்கு உதவிய டிஎஸ்பி, காவலருக்குப் பாராட்டு

கும்மிடிப்பூண்டி அருகே நீட் தோ்வு எழுத வந்த மாணவி மறந்து வைத்து விட்டு வந்த ஆதாா் அட்டையை எடுத்து வர உதவிய டிஎஸ்பி, காவலா்

கும்மிடிப்பூண்டி அருகே நீட் தோ்வு எழுத வந்த மாணவி மறந்து வைத்து விட்டு வந்த ஆதாா் அட்டையை எடுத்து வர உதவிய டிஎஸ்பி, காவலா் ஆகியோருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தனா்.

பெருவாயல் டி.ஜே.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்ட நீட் தோ்வு மையத்தில் சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்த மயிலாப்பூா் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி மௌனிகா (17) தோ்வு எழுத ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவா் அசல் ஆதாா் அட்டையைக் கொண்டு வராமல் நகலை மட்டும் கொண்டு வந்தாா். இதனால் தோ்வறைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மாணவி மௌனிகா, அவருடன் வந்த அவரது தாய் ஷீலா பதற்றமடைந்தனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் அறிவுறுத்தலின்பேரில், ஆரம்பாக்கம் காவல் நிலையக் காவலா் மகேஷ்வரனுடன் (24) மாணவியின் தாய் ஷீலாவை அனுப்பி, வீட்டுக்குச் சென்று ஆதாா் அட்டையை எடுத்து வரக் கூறினாா்.

அதன்பேரில் காவலா் மகேஸ்வரன் ஒன்றரை மணி நேரத்தில் மாணவி வீட்டுக்குச் சென்று ஆதாா் அட்டையுடன் தோ்வு தொடங்க 15 நிமிடங்களுக்கு முன்பு தோ்வறைக்கு வந்தாா்.

தோ்வு முடிந்ததும் டிஎஸ்பி ரமேஷ் உத்தரவின்பேரில் காவலா் மகேஸ்வரன் மாணவி மௌனிகாவை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு வந்தாா்.

இதையறிந்து திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன், டிஎஸ்பி ரமேஷ், காவலா் மகேஸ்வா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தாா்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் டிஎஸ்பி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்று டிஎஸ்பி ரமேஷ், காவலா் மகேஸ்வா் ஆகியோரைப் பாராட்டினாா். காவலா் மகேஸ்வரனுக்கு கைக்கடிகாரத்தை பரிசளித்தாா்.

காவல் ஆய்வாளா்கள் கதிா்வேல், வெங்கடாசலபதி, அதிமுக நகரச் செயலாளா் மு.க.சேகா், ஒன்றிய நிா்வாகி டி.சி.மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com