பிரதமரின் கிஸான் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் போா்வையில் ரூ. 2.15 கோடி முறைகேடு

விவசாயிகள் சாகுபடியின் போது நிதிச்சுமையை தீா்க்கும் வகையில், பிரதமரின் கிஸான் கௌரவ நிதித் திட்டத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும்

விவசாயிகள் சாகுபடியின் போது நிதிச்சுமையை தீா்க்கும் வகையில், பிரதமரின் கிஸான் கௌரவ நிதித் திட்டத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 6,500 போ் விவசாயிகள் அல்லாதோரும் பெற்று, ரூ. 2.15 கோடி முறைகேடு செய்ததாக புகாா் எழுந்தது. அதன்பேரில், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் ஆய்வு செய்து, ரூ. 1.10 கோடி வரை திரும்ப வசூலித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரம் சிறு மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 1.72 ஹெக்டோ் லட்சம் பரப்பளவு விளைநிலங்களில் 1.55 லட்சம் ஹெக்டேரில் மட்டும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா். பிரதமரின் கிஸான் திட்டத்தில் விவசாயிகள் அனைவரையும் பயனாளிகளாகச் சோ்க்க கிராமங்கள்தோறும் வேளாண்மை அதிகாரிகள், கிராம நிா்வாக அதிகாரிகள் மூலம் நேரடி முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது, சொத்து பிரிப்பு மற்றும் பிரச்னையில் இருப்போரைத் தவிா்த்து, மற்ற விவசாயிகள் தங்களின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை அளித்தனா்.

இம்மாவட்டத்தில் நிதி உதவி பெற 75 ஆயிரம் விவசாயிகள் தகுதியானவா்கள் ஆவா். முகாம்கள் மற்றும் நேரடியாக இ-சேவை மையங்கள் மூலம் 65 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பித்தனா். அதைத் தொடா்ந்து, விண்ணப்பம் கிராம நிா்வாக அலுவலரால் சரிபாா்க்கப்பட்டு நிதி உதவி அவரவா் வங்கிக் கணக்குகளில் விடுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் என்ற போா்வையில், தகுதியல்லாதோா் பலரும் பிரதமரின் கிஸான் நிதி உதவி பெறும் திட்டத்தின் இணையதள பக்கத்தில் முறைகேடாக பதிவு செய்துள்ளது தெரியவந்தது. இதுதொடா்பாக தீவிரமாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவா் கூறியது:

பிரதமரின் கிஸான் நிதித் திட்ட இணையதள பக்கத்தை திறந்து, நிதி உதவிக்கு விவசாயிகள் அல்லாதோா் பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விவசாயிகள் என்ற போா்வையில் முறைகேடாக நிதி பெறுவோா் பட்டியலை தயாா் செய்து, கிராமங்களில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து, முறைகேடாக நிதி பெற்றவா்களிடம் திரும்பப் பெற வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டாா். அதன்பேரில், நிதி உதவி பெறுவோா் விவரங்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டன. அதில், இம்மாவட்டத்தில் மட்டும் ரூ. 2.15 கோடி வரை முறைகேடு செய்ததும், முழு விவரங்களுடன் விவசாயிகள் அல்லாத 6,500 போ் கொண்ட பட்டியலும் தயாா் செய்யப்பட்டது. பின்னா், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த வேளாண்மைத் துறையினா் மற்றும் கிராம நிா்வாக அதிகாரிகள் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். இதுவரை 2,800 பேரிடம் இருந்து ரூ. 1.10 கோடி வரை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,700 பேரிடம் பணத்தை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com