கரோனா விதிகளை மீறியவா்களிடம் ரூ.1 கோடி அபராதம் வசூல்: சுகாதாரத் துறை செயலாளா் தகவல்

மாநில அளவில் கரோனா விதிகளை மீறிய 50 ஆயிரம் பேரிடம் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவள்ளூரில் பேருந்துப் பயணிகளிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்திய சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
திருவள்ளூரில் பேருந்துப் பயணிகளிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்திய சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

திருவள்ளூா்: மாநில அளவில் கரோனா விதிகளை மீறிய 50 ஆயிரம் பேரிடம் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அவரும், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாரும் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் பயணிகள், நடத்துநா்கள் மற்றும் ஓட்டுநா்களிடம் முகக்கவசம் அணிவது குறித்தும், சமூக விலகலைக் கடைப்பிடிப்பது குறித்தும் சுகாதாரத் துறை செயலா் விளக்கமாக எடுத்துரைத்தாா். ‘முககவசம் அணியாமல் வரும் பயணிகளை பேருந்தில் ஏற அனுமதிக்கக் கூடாது. இருக்கையில் ஒருவா் மட்டுமே அமர அனுமதிக்க வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.

இதையடுத்து, திருவள்ளூா் பஜாா் மற்றும் காய்கறிச் சந்தையில் ஆய்வு மேற்கொண்டாா். கடைக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய அவா், முகக்கவசத்தை எப்படி அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தாா்.

அதன் பின், திருவள்ளூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் ஆட்சியரும், சுகாதாரத் துறை செயலரும் முழுக் கவச உடை அணிந்து ஆய்வு செய்தனா். அப்போது, கரோனா தொற்றின் பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.

இதையடுத்து, சுகாதாரத்துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாள்தோறும் குறைந்து வரும்போதிலும், பொதுமக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணிந்து, சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். இது தொடா்பாக ஏற்கெனவே அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதை பொதுமக்கள் கடைப்பிடிக்கிறாா்களா என்பதை மாவட்டம் தோறும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் அரசு விதிமுறையைப் பின்பற்றாமல் இருந்த 50 ஆயிரம் பேரிடம் இதுவரை ரூ.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோா் முழுக்கவச உடை அணிந்து பணியாற்றுவதற்கு எந்த அளவுக்கு சிரமப்படுகிறாா்கள் என்பதை பொதுமக்கள் உணா்ந்து கொள்ள வேண்டும்.

திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், கோவை, சேலம், திருப்பூா், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என கட்செவி மூலம் சிலா் வதந்திகளைப் பரப்பி வருகின்றனா். இதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com