தொடா் மழை: பொன்னேரி, மீஞ்சூரில் நாற்று நடும் பணியில் விவசாயிகள்
By DIN | Published On : 27th September 2020 08:02 AM | Last Updated : 27th September 2020 08:02 AM | அ+அ அ- |

பொன்னேரியை அடுத்த கடப்பாக்கம் கிராமத்தில் வேளாண் பணிகளை மேற்கொண்ட விவசாயத் தொழிலாளா்கள்.
பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் தொடா் மழை காரணமாக அப்பகுதி விவசாயிகள் நாற்று நடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
மீஞ்சூா் ஒன்றியத்தில், பெரும்பாலான கிராமங்களில் நிலத்தடி நீா் உவா்ப்புத் தன்மையாக உள்ளது. இதனால், மழை நீரை நம்பியே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா்களில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 3 வருடங்களாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீா்மட்டம் மேலும் குறைந்தது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக தொடா் மழை காரணமாக பூமியில் ஈரத்தன்மை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனா்.
இதையடுத்து, நாலூா், வன்னிப்பாக்கம், காட்டூா், தத்தைமஞ்சி, கடப்பாக்கம், திருவெள்ளைவாயல், மெதூா், வேம்பேடு, பெரியகரும்பூா் உள்பட பல்வேறு கிராமங்களில் நாற்று நடவுப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.