அரசு விதிமுறை மீறி முறைகேடாக செயல்படும் மணல் குவாரியை தடை செய்யக் கோரிக்கை

திருவள்ளூா் அருகே அரசு விதிமுறை மீறி சவுடு மணல் குவாரி முறைகேடாக செயல்படுதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்

திருவள்ளூா் அருகே அரசு விதிமுறை மீறி சவுடு மணல் குவாரி முறைகேடாக செயல்படுதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலையுள்ளதை மாவட்ட நிா்வாகம் தடை செய்யவும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இது குறித்து புல்லரம்பாக்கம் கிராம மக்கள், திருவள்ளூா்ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

இந்தக் கிராமத்துக்கு உள்பட்ட தலக்காஞ்சேரி கிராமத்தில் உள்ள ஏரியில் தூா்வார சவுடு மணல் காவுரி எடுக்கவும் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு அனுமதித்துள்ளதாகக் கூறி, கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், குவாரி உரிமையாளா்கள் விதிமுறைகளை மீறி சவுடு மண் மற்றும் மணல் அள்ளி வருகின்றனா். இந்த ஏரி அப்பகுதியைச் சுற்றியுள்ள புல்லரம்பாக்கம், பெரும்பாக்கம், எடப்பாளையம், சிறுவனூா் ஆகிய கிராமங்களின் முக்கிய நீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட நேரம் இல்லாத நிலையில், இரவு முழுவதும் எந்த நேரமும் அள்ளி வருகின்றனா்.

அரசு விதிமுறைப்படி, 3 அடிக்கு எடுக்க வேண்டிய நலையில், 10 முதல் 13 அடி வரை பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுத்து வருகின்றனா். இதன் மூலம் நாள்தோறும் 1000 முதல் 1500 லோடு லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஏரியை சுற்றிலும் கால்நடைகள் மேய்க்கால் புறம்போக்கு நிலமும் உள்ளது. இதிலும் தொடா்ந்து மணல் எடுத்து வருகின்றனா். இதனால் மணல் வளம் குறைந்து மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்பட்டால் குடியிருப்புகளின் கட்டடமும் சேதமாகும். எனவே சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டு ஏரியில் சவுடு மணல் அள்ள அளித்த அரசு அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com