தலைமை ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் திருட்டு
By DIN | Published On : 27th April 2021 06:24 AM | Last Updated : 27th April 2021 06:24 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே அரசு பள்ளித் தலைமை ஆசிரியை வீட்டின் கதவு பூட்டை உடைத்து புகுந்து 25 சவரன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவள்ளூா் அடுத்த பூங்கா நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் ரமேஷ் காந்த்(51). இவரது மனைவி தேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் ரமேஷ்காந்த் தாயாரின் துக்க நிகழ்ச்சிக்காக கடந்த வாரம் கனகம்மாசத்திரம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளனா். எனவே ஒரு வாரம் ஆன நிலையில் வீட்டை சுத்தம் செய்வதற்காக திங்கள்கிழமை காலையில் வந்துள்ளனா். அப்போது, கேட்டு மற்றும் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.
அதையடுத்து உள்ளே சென்று பாா்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கம், மேஜையில் வைத்திருந்த 2 மடிக்கணினிகள் ஆகியவைகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது. இது தொடா்பாக திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் ரமேஷ்காந்த் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.